தமிழ் இளைஞர்களை மீண்டும் எழுச்சிகொள்ள இடமளிக்காதீர் – மைத்திரிக்கு சி.வி. கடிதம்

breaking
இராணுவ அடக்குமுறைகளை மேற்கொண்டு மீண்டும் தமிழ் இளைஞர்களை எழுச்சிகொள்ள இடமளித்துவிடவேண்டாம் என முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மைத்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன், கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்குமாறும்,  எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுமுகமான முறையில் நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துமாறும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரியுள்ளார். அந்த கடிதத்தில், அவசரகால நிலைமை கொண்டுவரப்பட்டதன் ஒரே நோக்கம், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்துவதற்காகவே.  எனவே இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத தமிழ் மாணவர்களைக் கைதுசெய்திருப்பது முறையற்றது என விக்னேஸ்வரன் கூறியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படங்கள் நீண்ட காலமாகவே அங்கு இருப்பதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், அவசரகால பிரகடனத்துக்கு முன்பாக இந்தப் படங்களை வைத்திருப்பது குற்றங்களாகக் கணிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு விகாராதிபதி மங்களராமய தேரர் பிரபாகரனை புகழ்ந்து பேசியமையையும், இதேமாதிரியான கருத்துக்களை அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் வெளியிட்டுள்ளமையையும், பிரபாகரனின் நிர்வாகத்தை புகழ்ந்து பேசிய திருமதி.விஜயகலா மகேஸ்வரன் தற்போது அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிப்பதையும் எடுத்துக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், இவற்றின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வேண்டுமென்று செய்யப்பட்ட நடவடிக்கை போல் தோன்றுகின்றது என்றும் அதனால் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இவ்வாண்டு மே 18 ஆம் திகதி நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் பத்தாம் வருட நினைவு கூரல் நிகழ்வுகளைக் குழப்பும் வகையிலும் இராணுவ பிரசன்னத்தை வடக்கில் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் உருவாக்கப்பட்டுள்ள துரதிஷ்டவசமான தற்போதைய சூழ்நிலையை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றதா என்றும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், மீண்டும் இராணுவ அடக்குமுறைகளை மேற்கொண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள இடமளித்துவிடவேண்டாம் என்றும் அவர் தனது கடிதத்தில் ஜனாதிபதிக்கு வலியுறுத்தி இருக்கின்றார். எனவே, எந்தவித நிபந்தனைகளும் இன்றி கைதுசெய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலைசெய்யுமாறு மாணவர்களின் சார்பாக வேண்டிக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.