முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகள் ஆரம்பம்!

breaking

தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த அறிவிப்பினை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு வெளியிட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தினம் வருடா வருடம் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த முறை 10 ஆம் ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும். அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இடம்பெற்று வருகிறது.

பாரிய அளவில் முன்னெடுக்க ஏற்பாடாகிய இந்த 10 ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களினால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு அமைதியான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இக்குழு அறிவித்துள்ளது.

மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்காக இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அப்பகுதி மக்களால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.