ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் .!

breaking
திருவாரூர் மாவட்டத்தில ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு, வேதாரண்யம் வட்டங்களில் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கும், திருவாரூர் மாவட்டத்தில் திருக்களார், ராயநல்லூர், நாலாம்சேத்தி உட்பட 16 கிராம ஊராட்சிகளிலும் டைட் காஸ் எடுக்கப்போவதாகவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள் விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஜூன் மாதத்தில் மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்த, அனைத்து அரசியல் கட்சிகள் விவசாய சங்கங்களை உள்ளடக்கிய போராட்டக்குழுக்களை ஊராட்சி வாரியாக அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி நேற்று திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் திருக்களாரில் பாரிஜாதவனேஸ்வரர் கோயில் அருகில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வை.சிவபுண்ணியம், முன்னாள் எம்எல்ஏ கே.உலகநாதன், திமுக ஒன்றிய விவசாய அணி செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சண்முகவேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருக்களார் ஊராட்சி சார்பில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜன் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ வை.சிவபுண்ணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் முதல் கட்டமாக போராட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி ஜூன் மாதத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான போராட்டக்குழுக்களை திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வாரியாக நியமிக்கத் திட்டமிட்டு அதற்கான முதல் கூட்டம் தற்போது நடத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி நாம் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில் அதனை கருத்தில் கொள்ளாது டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க மோடி தலைமை யிலான மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த மூர்க்கதனமாக முயற்சிக்கிறது. அரசியல் கட்சிகள், விவசாயிகள், சேவை சங்கங்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தை கைவிட மத்திய அரசு மறுக்கிறது. மீண்டும், மீண்டும் ஏல அறிவிப்பு செய்து எப்படியாவது ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வஞ்சகமாக முயற்சி எடுக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். எக்காரணம் கொண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். மத்திய, மாநில அரசுகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தைக் கையாண்டதைப் போல் திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் அப்படி செய்து விடலாம் என்று மத்திய, மாநில அரசு நினைக்கிறது. அது ஒரு போதும் பலிக்காது, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அனைத்து பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி தீவிரமான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம், மக்களின் உணர்வை புரிந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்துக்கு பின்னரும் திட்டத்தைத் தொடர நினைத்தால், திருவாரூர் மாவட்டம் போராட்ட களமாக மாறும். இவ்வாறு சிவபுண்ணியம் கூறினார். ‘முதல்வர் மவுனம் காப்பது ஏற்புடையதல்ல’ தஞ்சையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பதாக அம்மாநில முதல்வர், தேர்தல் பிரசார கூட்டங்களில் தெரிவித்திருக்கிறார். நான் அங்கு சென்று பார்த்தபோதும்  கூட அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அணைகளில் இருக்கிற தண்ணீரை ஏரிகளில் நிரப்பி வைத்துள்ளார். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து கூட்ட வேண்டும். அங்குள்ள அணைகளின் தண்ணீர் இருப்பை காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும். ஆணையம் கூடி தமிழகத்துக்கு அடுத்தகட்டமாக தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் 12ம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். இந்த ஆண்டாவது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகளுக்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். காவிரி டெல்டாவில் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் துவங்கி நாகை மாவட்டம் கோடியக்கரை வரை அனுமதி கொடுத்து  மத்திய அரசு மிக வேகமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இனியும் தமிழக முதல்வர் மவுனம் காப்பது ஏற்புடையதல்ல. இதுதொடர்பாக தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தனது நிலைப்பாட்டை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.