Take a fresh look at your lifestyle.

முள்ளிவாய்க்கால் முற்றுப்பெறுகிறதா காத்தான்குடி கவர் ஸ்டோரி ஆகிறதா-பொன் காந்தன்!

கவ்விப்பிடித்தபடி
இன்னும் கலையாமல் இருக்கும் இருளுக்குள்
ஒரு காட்டுப்பூனை புகுந்து களேபரமாகவிட்டது.
கழுத்துவெட்டிகள் கால் வைத்துவிட்டதாய்
வேர்த்துப் போய் இருக்கின்றனர் பலர்
ஊரடங்குச் சட்டத்துள் உறைந்து கிடக்கின்றது ஊர்
எண்பத்தி மூன்றுபோல்
கையில் பொல்லும் கல்லுமாய் காடைகள் வீதியில்
வெண்ணை திரண்டுவர தாழி உடைவது
தமிழனுக்கு இதுவே முதல் முறையுமல்ல
அண்ணைபோன பின் நந்தவனத்து ஆண்டிகளின் கையில்
மண் சிக்குண்டு
முண்டி விழுங்கியபடி சொல்லமுடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றது
முள்ளிவாய்க்கால் விளக்கேந்தல் போட்டிக்கு
ஆண்ட பரம்பரை ஆளுக்கு யாரி பிரித்து
ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது
சண்டாளன் சகரான்
குழந்தைகளுக்கு கொள்ளி செருகிவிட்டான்
இடைத்தரகர்கள் இல்லாமல்
இந்த இளவொன்றும் நடக்கவில்லை
காக்காமாரின் கடைத்தெருக்கள்
பற்றி எரிந்து பரநாசமாகின்றன
கர்த்தரின் திருச்சபைக்குள் காரணமில்லாமல்
ஒருவன் காவிச்சென்று வெடித்திருப்பானா
அவன் பின்னே ஒரு நீளமான கயிறு இருக்கின்றது.
நித்திரைபோல் நடிப்பவனை எழுப்புதல் கடினம்
அப்படித்தான்
அரிதாரம் பூசியபடி பல ஐஎஸ்ஐஎஸ்கள்
அரசியல் கதிரைகளில் ஆட்டம்போடுகின்றன
கந்தப்பு
வேட்டியை அவிட்டுதறிக்கொண்டு ஆனையிறவில் நிற்கிறார்
மண்டான் சுருட்டொன்றைத் தவிர
மனுசனிடம் வேறொன்றும் கிடையாது
பத்துப்பிள்ளை பெத்துவளுக்கு
ஒத்ததைப்பிள்ளை ஈன்றவள் முக்கி காட்டிய கதைதான்
கொச்சிக்கடை வெடிப்பும்
பிறகு நடக்கும் கட்டளைகளும் கர்ஜனைகளும்
கந்தகத்தோடு கட்டிப்புரண்டு
வித்தைகாட்டிய தமிழரின் வியப்பு ஓய்ந்து
இப்போதுதான் முடிந்திருக்கின்றது பத்தாண்டு
அதற்கிடையில்
சுண்டிக்குளிக்கு மொட்டைக்கடிதம் போட்டு
வெருட்டிப்பார்க்கின்றன சில கரட்டி ஓணான்கள்
ஈழத்தமிழுருக்குள்
எலிப்புளுக்கைகளை எறிந்து
மதவாத மாந்தீரகம் எடுபடாது
அல்லாவை அறிவதற்கு
குல்லாவும் புர்காவும் தேவையில்லை
இயேசுவை உணர
அப்பமும் ஆர்சி நொன்னார்சி எதற்கு
கந்தனை உணர
காவியும் காவடியும்கூட அவசியமில்லை
வள்ளுவத்தை போல
குர்ஆனையும் பைபிளையும் படித்துவிட்டு
எல்லாம் ஒன்றென்று
போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்
இனம் என்பதே பலமான அடையாளம்
இசுலாம் கிறித்துவம் இந்துவென
அங்கவஸ்திரங்களை யாரும் உடுத்தியிருந்தால்
உரிந்து வைத்துவிட்டு ஓடிவாருங்கள்
பிரபாகரன் காலத்து பெரிய கம்பளம்
பெட்டகத்துள் இருக்கின்றது உடுத்திக்கொள்ளுங்கள்
ஒன்றாக நில்லுங்கள்
இந்த வேல்ட் வேடிக்கையானது
முள்ளிவாய்க்காலில் மூலதனம் இருந்தது
முண்டியடித்தனர்
இப்போது காத்தான்குடியில் கவர் ஸ்டோரி தேடி
கதவருகில் நாய்கள் போல் காத்துக்கிடக்கின்றனர்
காஸாவில் மனிதர்கள் செத்தொழிகின்றனர்
பார்க்கவில்லை
பாரிசில் பழைய தேவாலயம் பற்றி எரிந்தது
எவரும் சாகவில்லை
செத்தவீடு கொண்டாடியது நியூயோர்க்
முள்ளிவாய்க்காலில் இலட்சமாய்
கொன்றாழிக்கப்பட்டது மானுடம்
எட்டியும் பார்க்கவில்லை எங்கள் பக்கம்
இப்போது
ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களுக்கு பிறகு
அனைத்துலகும் விட்ட கண்ணீரில்
வழுக்கி விழுந்து வாட்டில் இருக்கின்றேன்
இனவாதமாயும் மதவாதமாயும்
மனிதர்களை பிரித்து ஆங்காங்கு வைத்து
பிணங்களை பார்ப்பதற்கு
உலக தர்ம கர்தாக்களுக்கு அலாதிப்பிரியும்
பேதமைத்தத்துவத்துள் விழுந்து பெருச்சாளியாகி
அடுத்தவனையும் அரித்தவைகளில்
அநாகரிக தர்பாலாக்கள் சகரான்கள் என்று
நாம் கண்டு கடக்கவேண்டியதாகிவிட்டது
நின்று தேங்கமுடியாது
நிறைய வேலை இருக்கின்றது ஈழத்தமிழனுக்கு
நினைவேந்தல்களோடு மட்டும்
பத்தியப்படப் பழகிவிட்டோம் நாம்
புத்தியை பாவித்து செய்ய வேண்டிய பலது இருக்கும்
இந்த முட்டாளுக்கு குளோபலேசன் தெரியாது
வெட்டிப்பிரித்து
பூமி ஓட்டத்தை புரிந்து கொண்டவர்கள்
பெற்ற தாய் மண்ணுக்கு பெறுமதியாய் ஏதும் செய்யுங்கள்
எமக்கு இக்கட்டான காலத்தை
பரிசளிக்க நினைக்கின்றது ஒரு கூட்டம்
அதை தட்டிவிட்டு தமிழர்கள் தளம்பாமல் இருத்தல் வேண்டும்
இளவரசி மேகனின் பிரசவத்தை
எங்கள் வேலி வரைக்கும் காவி வந்து சேர்கின்றது செய்தி
தங்கள் பிள்ளைகளுக்காய் காத்திருக்கும்
எங்கள் தாய்மாரை தாங்கி செல்ல தடுமாறுகின்றது உலகம்
கந்தறுந்த உலக வேடங்களை அம்பலமாக்கும்
விக்கிலீக்சும் சிறையில்
அந்தரமாயிருக்கின்றது அடுத்து என்ன நடக்குமென
யாராவது அதிசயம் நிகழ்த்துங்கள் தமிழர்களே-பொன் காந்தன்!