‘மட்டக்களப்பின் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் -லெப். கேணல் றீகன்

breaking

மட்டக்களப்பு, பாலையடி வெட்டையில்; முன்னேறிவந்து நிலை கொண்டுள்ள படையினரைத் தாக்க புலிகள் திட்டமிட்டனர்.

கடைசி வேவு பார்த்து, இராணுவத்தின் பலம் – பலவீனத்தை அறிந்துவர, தளபதி றீகன் இன்னுமொரு போராளியையும் கூட்டிக்கொண்டு ஸ்தலத்திற்குச் செல்கிறான்.

இடைவழியில், இன்னொரு இராணுவ அணியை எதிர்பாராதவிதமாக எதிர்கொள்ள நேரிடுகிறது.

மோதல் வெடித்தது – றீகனுக்கு குண்டடிபடுகிறது.

இவர்கள் இருவர்; எதிரியோ கும்பலாக இருந்தான். இயலுமானவரை பின்னால் வந்தார்கள். இரத்தம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு அளவுக்குமேல் றீகனால் நகர முடியவில்லை.

கூடப்போன போராளியால், தளபதியை நீண்டதூரம் தூக்கிக்கொண்டு தப்பி ஓட முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டான்.

றீகன் சொன்னான்; “இனி என்னால வர ஏலாது. நீயும் நிண்டால் சாக நேரிடலாம். ஆயுதங்களும் பிடிபட்டுவிடும்; என்னை விட்டிட்டு, எல்லாத்தையும் கொண்டு நீ ஓடு.”

‘மட்டக்களப்பின் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்; அந்தப் பிராந்தியத்தின் இரண்டாவது தளபதி. தன்னந்தனியனாகச் செத்துக்கொண்டிருக்க, எப்படி இடை நடுவில் அநாதரவாக விட்டுவிட்டுச் செல்லலாம்……?’ அந்தப் போராளி உறைந்து போய் நின்றான்.

ஆனாலும் வேறு வழி எதுவுமே அற்ற நிலை.




தன்னிடமிருந்த எம் 16 கிரனைட் லோஞ்சரையும், இடுப்பில் கட்டியிருந்த பிஸ்டலையும் கழற்றிக்கொடுத்து – சிறப்புத் தளபதியிடம் சொல்ல வேண்டிய சில இரகசியத் தகவல்களையும் காதோடு சொல்லிவிட்டு, குப்பியைத் தன் வாயில் செருகிக்கொண்டே, “போட்டு வா” என்று வழியனுப்பிவைத்தான் அத்தளபதி.

விதைக்கப்பட்டது வீரமும்தான் தொகுப்பிலிருந்து…

விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை 1993).