ஈரோட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்ச்சிப் பெருக்கோடு நடைப்பெற்றது.

breaking
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் ஸ்டெர்லைட் எதிப்புப் போராளிகளுக்கு முதலாமாண்டு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் மே 20 திங்களன்று மாலை 6.30 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு கட்சி இயக்க வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுப்பட்ட உணர்வோடு அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் நினைவேந்தல் நிகழ்வு திட்டமிடப்பட்டது.
அதன்படி... ஸ்டெர்லைட் தியாகிகளின் படத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மலர் தூவி அஞ்சலியைத் தொடங்கிவைத்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு. அ. கணேசமூர்த்தி அவர்கள், முள்ளிவாய்க்கால் தியாகிகளை நினைவு கூரும் வகையில் தியாக தீபத்தை ஏற்றி வைத்தார். அடுத்துத் தமிழீழப் போராளிகளுக்கும், மக்களுக்கும் எழுச்சி முழக்கங்களோடு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். தமிழீழம் குறித்த சமர் பா குமரனது எழுச்சிப் பாடல்களோடு உரையரங்கம் தொடங்கியது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு சார்பாகத் தோழர் நிலவன் தொடக்கவுரையும், ஒருங்கிணைப்பு உரையை தோழர் குறிஞ்சியும் ஆற்றினார்கள். தற்சார்பு விவசாய சங்கத்தைச் சார்ந்த தோழர் கி.வே.பொன்னையன், கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் வடிவேல் அஞ்சலி உரைக்குப் பிறகு, விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.