சிறிலங்கா ஆழஊடுருவும் படையின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள்!

breaking

23.05.2008 அன்று முறிகண்டி- அக்கராயன் வீதியில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் லலித் ஜெயசிங்க என்பவரின் தலைமையிலான சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் தாக்குதல் அணியினரால் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள்…. 

சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் அணிகளின் ஆதிக்கம் 2008 ஆம் ஆண்டு வன்னிக்காடுகளை சூழ்ந்திருந்தது. 1998,1999 காலப்பகுதி போன்று நிலமை 2008 இல் இருந்திருக்கவில்லை. LRRP(Long Range Reconnaissance Patrol) or Deep Penetration Unit (DPU)இன் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுகொண்டிருந்த நேரம் அது. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதியான கேணல் சாள்ஸ் அவர்களின் இழப்பினை முக்கியமான குறிப்பிடலாம். இது 2008 இன் ஆரம்பம்.. விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல பயணிகள் பேருந்து, உந்துருளியில் செல்பவர்கள் அம்புலன்ஸ் வண்டி என பலரும் இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதலின் படையணியின் பொறுப்பதிகாரியாக மட்டுமல்ல நேரடியாக வன்னிக்காடுகளில் தாக்குதல்களில் ஈடுபட்ட லலித் ஜெயசிங்க என்பவர் 2008 நவம்பரில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலின் காயமடைந்து, அடுத்தநாள் தாக்குதலின் போது கொல்லப்பட்டிருந்தார். இவரது உடலையும் ஏனைய பபடையினரையும் எம்.ஜ உலங்கு வானுூர்தி மூலம் விமானப்படையினர் காப்பாற்றியிருந்தனர். ஏற்கனவே ஏ9 கொக்காவில் பகுதியில் வீதிபாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் மீது தாக்கமுற்பட்ட வேளை விடுதலைப்புலிகளின் துணைப்படைப்படைவீரர் ஒருவரால் LRRP படையினர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இவர் விடுதலைப்புலிகளின் சீருடை அணிந்திருந்தார்.

ஜெயசிக்குறு சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னேற்றத்தினை தடுக்கும் வகையில் தொல்லைகொடுக்கும் தாக்குதல்களை (1997 க்கு நடுப்பகுதிக்கு பின்னர்)விடுதலைப்புலிகளின் கட்டளைத்தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தலைமையிலான அணியினர் செயற்பட்டிருந்தனர். இதில் வேறு அணிகளும் ஈடுபட்டிருந்தாலும் வவுனியா மாவட்டத்தினை மையமாக கொண்டு பிரிகேடியர் ஜெயம் அவர்களின் அணியினர் வடகாட்டு புளியங்குளம், புளியங்குளம் கண்டிவீதி, இளமருதங்குளம், சேமமடு, சின்ன பூவரசன்குளம், நைனாமடு என தொடர்ச்சியான தாக்குதல் ஈடுபட்டு இராணுவத்தினரின் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஏதுவான விநிகோகத்தினை கட்டுப்படுத்தியிருந்தனர். மாங்குளத்தை படையினர் கைப்பற்றியிருந்த வேளை இரணைஇலுப்பைக்குளம் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வன்னியின் பெரும்பாலான காடுகள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலேயே இருந்தது. இது புலிகளுக்கு பெரும் சாதகமான நிலையே அப்போதைய காலத்;தில் இருந்தது என சொல்லலாம். 1999 நவம்பர் 2 ஆம் திகதி ஓயாத அலைகள் 3 ஆரம்பிக்கும் வரைக்கும் இப்படையணியின் சிறிலங்கா படையினரின் விநியோக நடவடிக்கைகள் மீதான தாக்குதல்கள் உதிரிகளாக இடம்பெற்றிருந்தது.

விடுதலைப்புலிகளைப்பொறுத்தவரை வன்னியின் பாதுகாப்பாக அமைந்திருப்பது அதன் ஆறுகளும் ஆறுகள் ஊடறுத்துச் செல்லும் காடுகளும் காடுகளைதாண்டியுள்ள குளங்களுமே. யார் கையில் ஆறுகள் இருக்கின்றதோ அவர் கையில் காடுகள் இருக்கும். யார் கையில் காடுகள் இருக்கின்றதோ அவர் கையில் குளங்கள் இருக்கும். யார் கையில் குளங்கள் இருக்கின்றனவோ அவர் கையில் நிலமும் வளமும் இருக்கும். குறிப்பாக குளங்களை அண்டியே விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம்கள், விவசாயபண்ணைகள், மற்றும் களஞ்சியங்கள் அமைந்திருந்தது. இறுதி யுத்த காலப்பகுதியில் குளங்களின் அணைக்கட்டுக்கள் யாவும் சிறிலங்கா படையினரின் பாதுகாப்பு அரணாக மாறியிருந்தது. புலிகள் எவ்வாறு ஜெயசிக்குறு சமருக்கு எதிராக தாக்குதல் நடத்தினார்களோ அதேபோலவே இறுதியுத்த காலத்தில் படையினரின் உள்நுழைவுத் தாக்குதல்கள் அமைந்திருந்தன. இது 2008 ஆம் இறுதிவரைக்கும் புலிகள் பாணியிலான உள்நுழைவுத்தாக்கும் திறன் கொண்ட 8 பேர் கொண்ட அணிகள் (eight man team) மேற்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் விநியோகங்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல மக்களின் போக்குவரத்தினை நிறுத்தும் அளவிற்கு பல தாக்குதல்கள் அமைந்திருந்தன. அத்தோடு விடுதலைப்புலிகளின் சீருடையிலேயே படையினர் நடமாடுவதால் அடையாளம் காண்பது மிகவும் கடினம். இது வன்னிக்கே மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டிருந்தது. இது முள்ளிவாய்க்கால் வரைக்கும் தமிழ் பேசும் துணை இராணுவக்குழுக்கள் மக்களோடு சேர்ந்து இருந்தமையையும் குறிப்பிடலாம்.

பிரதான வீதி(முறிகண்டி தொடக்கம் பனிக்கன்குளம் வரை, புளியங்குளம் பிரதான வீதி, கனகராயன்குளம் பிரதான வீதி, புத்துவெட்டுவான் வீதி, முறிகண்டி-அக்கராயன் வீதி, அம்பலப்பெருமாள் -மல்லாவி வீதி, ஆனைவிழுந்தான் 8 ஆம் கட்டை, துணுக்காய்- வெள்ளாங்குளம் வீதி, நெடுங்கேணி- புளியங்குளம் வீதி, ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதி என மெல்ல மெல்ல ஆபத்தான வீதிகளாக மாற ஆரம்பித்திருந்தது. கிளைமோர் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுகொண்டு இருந்தார்கள். பொதுமக்கள் போக்குவரத்து செய்யவே அச்சம் மிகுந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்த 2008 இல் சிறிலங்கா படையினரின் விமானத்தாக்குதல்களும் அதிகரித்திருந்தது.

சமாதான காலத்தின் பின் வளர்ச்சி அடைந்த கிராமங்களில் பாரதிபுரமும் ஒன்று. 23.05.2008 அன்றைய நாள் கிராமமே நொடிந்து போய்விட்டிருந்தது.

சிறிலங்கா ஆழ ஊடுருவும் தாக்குதல் அணியினரின் தாக்குதல் ஒன்று அக்கராயன் முறிகண்டி வீதியில் இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறு பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அச்சம்பவத்தின் ஒளிப்படங்களை இங்கே பதிவேற்றுகிறேன்.

அக்கராயன் பக்கத்தில் இருந்து முறிகண்டி நோக்கி வந்து கொண்டிருந்த கயஸ் வாகனத்தின் மீதே இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

பதினாறு பேரின் இறுதி வணக்க நிகழ்வு பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் நானும் கலந்து கலந்துகொண்டிருந்தேன்.

-சுரேன் கார்த்திகேசு -