கோழிகளை மட்டுமல்லாது கோழிக்கூடு, முட்டைகளையும் திருடியவர்களிற்கு தீர்ப்பு

breaking
    [caption id="attachment_70402" align="alignright" width="300"] சித்தரிப்பு படம்[/caption] கூண்டோடு கோழிகளைத் திருடிய ஒருவருக்கு மூன்று மாத காலச் சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நாவற்குழி 300 வீட்டு திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இந்த நபர்கள் கோழிக்கூட்டுடன் முட்டைகளையும் கடந்த ஏப்பிரல் மாதம் 24ஆம் திகதி திருடி சென்றனர். இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் சாவகச்சேரி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் நாவற்குழி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது அவர்கள் தாமே திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதன்போது அவர்கள் தாமே திருடியதாகவும் திருடிய கோழிக்கூட்டில் கோழிகள் முட்டைகள் என்பவற்றை யாழ்ப்பாணத்தில் விற்று விட்டதாகவும் நீதிமன்றில் தெரிவித்தனர். அதனையடுத்து அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது முதலாம் எதிரிக்கு 6 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்த மன்று உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இரண்டாம் எதிரிக்கு ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்த மன்று மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.