ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு சரிவுக்கு என்ன காரணம்.?

breaking
ஆந்திர மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. அதன்படி அங்குள்ள 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்றத் தொகுதி ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, கடந்த மாதம் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் நடந்த இரண்டு தேர்தல்களின் வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன. சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, தெலுங்கு தேசம் கட்சி 11 இடங்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 85 இடங்களும் பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளுக்குமிடையே கடும் போட்டி நிலவிய நிலையில்,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 103 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், அந்த தேர்தலில்  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கடந்த ஐந்து வருடங்களில், தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சிக்கு எதிராக நிறையப் போராட்டங்களை நடத்தினார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. அதே வேளையில், மறுபுறம் மக்களிடையே தன் செல்வாக்கைக்  கொண்டுசெல்வதிலும் அதிக கவனம் செலுத்தினார். இதன் எதிரொலியாகவே, தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திராவில் மீண்டும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.