காரைக்குடி தொகுதி வாக்குப் பெட்டி சேதம்.?

breaking
2019 பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில், பா.ஜ.க கூட்டணியும் தமிழகத்தில் தி.மு.க கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில், சிவகங்கை தொகுதியில் பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, முதல் பெட்டியாக காரைக்குடி தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் ஒரு பக்கத்தின் பூட்டு உடைந்திருந்தது. அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்த ஹெச்.ராஜா அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். காரைக்குடி தொகுதி வாக்குப் பெட்டி சேதமாகியிருப்பதால் விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற கோரிக்கையை அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளிடம் முன் வைத்தார். வழக்கமாக, ஒரு பாராளுமன்றத் தொகுதியில் 5 பெட்டிகளின் விவிபாட் ஒப்புகைச் சீட்டுகள் (வாக்காளர் எந்தச் சின்னத்திற்கு வாக்களித்திருக்கிறார் எனக் காட்டும் சீட்டு) எண்ணப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இப்போது ஹெச்.ராஜாவின் கோரிக்கையால், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் 5 பெட்டிகளின் விவிபாட் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படவிருக்கின்றன. சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அதிக வாக்குகள் இடைவெளியில் முன்னிலையில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.