வவுனிக்குளத்தில் முதலைகளை விடுவதற்கு மக்கள் எதிர்ப்பு!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படுகின்ற முதலைகளை வவுனிக்குளத்தில் விடும் செயற்பாட்டுக்கு மீனவர்களும் பிரதேச மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்னர். முல்லைத்தீவு- கேப்பாப்புலவு பகுதியிலுள்ள இராணுவமுகாமிற்குள் புகுந்த முதலை, வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடிக்கப்பட்டு அவை வவுனிக்குளத்தில் விடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு- மாந்தை, கிழக்கு துணுக்காய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் விவசாயிகளுக்கான நீர் விநியோகத்தை வழங்கும் ஒரு குளமாகவும் அதேவேளை நூற்றுக்கும் மேற்பட்ட நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தொழிலாகவும் அமைந்துள்ளதுடன், பயிர்ச்செய்கை காலங்களில் குளத்தின் அலை கரைப்பகுதி, கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளாகவும் பயன்படுகின்றன. இந்நிலையில் குளத்தில் காணப்படுகின்ற முதலைப்பெருக்கத்தினால் மீனவர்களின் வலைகள் சேதமாக்கப்படுவதுடன், தமது தொழில்களும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ள அதேநேரம் குளத்தை அண்மித்த பகுதிகளில் மேச்சலுக்காக விடப்படுகின்ற மற்றும் குளத்திற்கு நீர் தேடிச்செல்லும் கால்நடைகளையும் முதலைகள் இரையாக உட்கொள்கின்றன என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வவுனிக்களம் முதலைகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது மாத்திரமல்ல முல்லைத்தீவு மாவட்டத்தில் எங்கு முதலைகளை பிடித்தாலும் அவற்றை வவுனிக்குளத்தில்தான் கொண்டுசென்று விடும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.