Take a fresh look at your lifestyle.

எமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை ) – சிவசக்தி

அறிவுப்பெட்டகமான யாழ்நூலகம் எரியூட்டப்பட்டதன் 39ஆம் ஆண்டின் இன்றைய நாளில்…. எமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை )

‘தமிழர்களை இலங்கைத் தீவிலிருந்து முற்றாக அழித்தொழித்து, இலங்கை என்பது ஒரு சிங்கள பௌத்த நாடு ‘ என நிறுவுவதனையே சிங்களப் பேரினவாதம் தன்னுடைய இலக்காக கொண்டிருக்கின்றது. இதனையொட்டியே தமிழர்களின் வாழ்விடங்களை அபகரிப்பதும், அங்கு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதும், தமிழ்மக்களுக்கான பண்பாட்டு விழுமியங்களைச் சிதைப்பதும், தமிழ்மக்களின் கல்வி உள்ளிட்ட உரிமைகளை மறுப்பதும் காலங்காலமாக நடத்தப்பட்டு வருகின்றது.

ஈழத்தமிழர்கள் தனியான இனம் என்பதை மறுத்துவரும் சிங்களப்பேரினவாதம், தமிழர்களிடமிருந்து முதலில் அழிக்க விரும்பியது, இனியும் அழிக்க விரும்புவது எங்களின் சிந்திக்கும் ஆற்றலையும் ஆளுமையையும் தான். ஐரோப்பிய மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் பெரும் கல்விமான்களாக தமிழர்களே இருந்ததையும், நிர்வாக அலகுகளில் உயர்பொறுப்புகளில் தமிழர்களே பரவியிருந்ததையும் கண்ணுற்றது சிங்களப்பேரினவாதம், அப்பொழுதே தமிழர்களை இலங்கைத் தீவிலிருந்து முற்றாக அழித்தொழிக்க உறுதிபூண்டது.
இலங்கையின் பேரினவாதம் தமிழ்மாணவர்களின் கல்வி உரிமையை நசுக்கிவிடுவதற்காக, 1970களில் தரப்படுத்தல் முறையை அன்றைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்தனர். பேரினவாத அரசின் இந்த தரப்படுத்தல் கல்விக்கொள்கை, கல்வியே எங்கள் மூலதனம் என்று வாழ்ந்த தமிழ் இளைஞர்களை கொதிப்படையச் செய்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தமிழ் இளைஞர்களின் எழுச்சியையும் கிளர்ச்சியையும் அடக்குவதற்காகவே பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் என்கின்ற தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைச்சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சிங்களப்பேரினவாத அடக்குமுறை ஆட்சியாளர்கள் அன்றுமுதல் இன்றுவரை தமிழர்களுக்கெதிரான இனத்துவேசக் கருத்துகளை வெளிப்படையாகவே முன்வைத்து வருகின்றனர். இவர்களில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள முதலாவது ஜனாதிபதியான ஜூலியன். றிச்சார்ட். ஜெயவர்த்தனா மிகவும் முக்கியமானவர். பிறப்பால் கிறிஸ்தவரான இவர், தன்னுடைய அரசியலுக்காக பௌத்த இனவாதியானவர். இவரே இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமேயான நாடு என்பதில் உறுதியாக நின்றவர். தமிழர்கள் இரத்தம் சிந்தியபோதெல்லாம் தமிழர்களுக்கெதிரான பேரினவாத உணர்வுகளை தன்னின மக்களிடம் தூண்டிவிட்டவர்.
இவரே பேரினவாத இனவெறியை ஊதிஊதி முட்டி பெருஞ் சுவாலையாக்கியவர். தன்னுடைய அடிவருடிகளின் ஒத்துழைப்புடனே தமிழர்களின் பூர்வீக நிலத்தில் தமிழர்களை அடக்கிஆளத்துடித்தார் ஜெயவர்த்தன. இதன்விளைவாக 1981 ஆம் ஆண்டிலும் சிங்கள அரசபயங்கரவாதம் தலைவிரித்து பேயாட்டம் ஆடியது.

1981 மேமாதம் நள்ளிரவு தாண்டி ஜூன் மாதம் முதலாம்நாள் அதிகாலை முதல் யாழ்ப்பாணநகரம் பேரினவாதத்தீயில் பற்றியெரியத் தொடங்கியது. யாழ்ப்பாண சந்தைப்பகுதி, கடைத்தொகுதிகள், தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரனின் வீடு, ஈழநாடு பத்திரிகை அலுவலகம் என்பவற்றோடு தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதும், தமிழ்மக்களின் அறிவுக்களஞ்சியமுமான யாழ்ப்பாண பொதுநூலகம் எரியூட்டப்பட்டது. இது தமிழினத்துக்கு எதிரான மிகப்பெரிய பண்பாட்டுப் படுகொலையாக வரலாற்றில் பதிவுசெய்யபட்டுள்ளது.

இந்த தீவைப்பு என்பது சிங்களபேரினவாத ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசால் நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்பதை எல்லோரும் அறிவர். இதனை அன்றைய அரசில் விஞ்ஞான , கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ என்பவரும், மகாவலி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனம், மின்திறன், தோட்டத்தொழில் அமைச்சராகவிருந்த காமினி திசநாயக்க என்பவருமே யாழ்ப்பாணம் வந்து முன்னின்று படையினரையும், காடையர்களையும் வழிநடாத்தினார்கள் என்பதையும் வரலாறு பதிவேற்றிவைத்திருக்கின்றது.

20ம் நூற்றாண்டில் உலகில் நடத்தப்பட்ட இனஅழிப்பில் மிகப்பெரும் வன்முறையாகக் இது உள்ளது. அன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் அண்ணளவாக ஒருஇலட்சம் அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

இங்கு தமிழர்நிலத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், மற்றும் பலநூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள,; 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் காணப்படுகின்றன. இந்த நூல்களும் ஏட்டுச்சுவடிகளும் எக்காலத்திலும் எவராலும் விலை மதிக்கமுடியாதவை என்பதே உண்மையாகும்.

இன்றும் தமிழ் இளையோரின் கல்விஆற்றலையும் அவர் தம் ஆளுமைகளையும் சிதறடிக்கவும் தமிழ் இளையோரின் பண்பாட்டு வாழ்வியலை சிதைக்கவும் சிங்களப்பேரினவாதம் முனைப்புடனேயே உள்ளது. இதன் விளைவாகவே இன்றைய எம் சமுகத்தில் பல்வேறு பண்பாட்டுச் சீரழிவுகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன.

எரித்தழிக்கப்பட்ட இந்தநூலகம் தமிழர்களின் பெருமையை மட்டுமன்றி, தமிழினத்தவரின் அறிவுத்தேடலையும் உலகிற்கு கட்டியம்கூறிநின்றது என்னறால் மிகையாகாது. நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் அழியாத வடு ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியத்தின் பேரெழுச்சிக்கு உரம் ஊட்டியது என்றால் அது மிகையல்ல.

இந்நூலகத்தையும் சுற்றியிருந்த தமிழர் வளங்களையும் எரியூட்டியதன் மூலம் தனது இனவாதகோர முகத்தை உலகிற்கு புலப்படுத்தியது பேரினவாதம். எரிக்கப்பட்ட யாழ்ப்பாணநூலகம் எமது அடுத்தடுத்த தலைமுறையினரின் மனங்களில் வரலாற்றின் வடுவாக ஆழப்பதிந்துவிடக்கூடாது என்பதே இன்றைய பேரினவாதிகளின் எண்ணம். அதற்கமைவாகவே, ஆறாதவடுவாகப் பாதுகாக்கப்படவேண்டிய அந்த எரிவின் எச்சம் புதுப்பிக்கப்பட்டுவிட்டது.

ஆயினும் அன்று யாழ்ப்பாண நகரத்தில் கொழுந்துவிட்டெரிந்த தீ, இன்னமும் தமிழர்களாகிய எம் மனதில் எரிந்தவண்ணமே உள்ளது. எம்மினத்தின் வருங்கால தலைமுறையினர் இந்த வரலாற்றின் உண்மைகளை மனங் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர். காலங்காலமாக எப்படியெல்லாம் நாங்கள் அழிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும், விரட்டப்பட்டும் வருகின்றோம் என்கின்ற இந்தவரலாற்றை எமது இளையவர்கள் உணர்ந்துகொண்டு, வரலாற்றின் பாதையில் நகர்வதே எமது இனத்துக்கு விடியலைப் பெற்றுத்தரும்.

காலத்தின் நகர்வுப்போக்கில் எம்மினத்தின் வாழ்வும் வரலாறும் திரிபுபடுத்தப்படவும் பொய்யாகப் புனையப்படவும் வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகின்றன. அதனாலேயே ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்கின்ற இடமெல்லாம் எம்மினத்தின் வரலாற்றை பாதுகாக்க முன்வரவேண்டும். அப்பொழுதுதான் எமது இனம் தொடர்ந்தும் உண்மையான வரலாற்றின்வழி நகர்ந்து உன்னதமானதாக திகழ முடியும்.

தாரகம் இணையத்திற்க்காக 

சிவசக்தி

%d bloggers like this: