‘தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் ' வெடிக்கும் இந்திய அரசுக்கு எச்சரிக்கை.!

breaking
பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியை மீறி, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், 8ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக இந்தி மொழியை திணித்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 4ம் தேதி அனைத்துக் கட்சி போராட்டம் நடைபெறும் என்றும், டெல்டா மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.