பாயும் புலியாக மாறுமா பாமக.?

breaking
உள்ளாட்சி தேர்தல் கூடிய சீக்கிரம் வரப்போகிறது.. தேர்தலுக்கு பின் கடும் நெருக்கடி நிலையில் உள்ள, பாமக இதில், என்ன செய்ய போகின்றன என்பது இதுவரை தெரியவில்லை. வட மாவட்டங்களில் அவங்க மட்டும்தான் கெத்தா, நாங்க கிடையாதா என்று பேரம் பேசி கூட்டணியில் சேர்ந்தது தேமுதிக. கடைசியில் இரண்டு பேருமே தோற்று விட்டார்கள். ஒரே ஆறுதல் என்னவென்றால், பாமக வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இப்போது விஷயம் என்னவென்றால், பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் தங்களுக்கு தோல்வி என்பதை இந்த கட்சிகள் எல்லாருமே நினைக்க தொடங்கிவிட்டனர். ஒருசிலர் வெளிப்படையாகவே சொல்லி வருகின்றனர். அதனால் உள்ளாட்சி தேர்தலில் பாமக என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க போகிறது என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனென்றால், உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்த போகிறீர்கள் என்று கேட்டு கொண்டே இருந்தவர் ராமதாஸ்தான். கடந்த 2018, மார்ச் 23-ம் தேதி, "தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாமல் காலம் தாழ்த்தியதால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி 1,950 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று சொல்லி அறிக்கையே வெளியிட்டார். நடந்து முடிந்த தேர்தலில் பாமகவுக்கு நல்ல வாக்கு வங்கி கூடி உள்ளது. வட மாவட்டங்களில் செல்வாக்கை பெற்றுள்ள பாமக, ஒருவேளை தனித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கவே செய்யும். ஏனென்றால், உள்ளாட்சி தேர்தல் என்பது முற்றிலும் லோக்கல் அதாவது உள்ளூர் பலத்தை அடிப்படையாக கொண்டது. அதனால் வார்டு, நகராட்சி என ஒன்றுவிடாமல் களம் இறங்கி வேலை பார்க்க வேண்டும். இதில் பாமகவுக்கு பிளஸ் ஆக உள்ளது திண்ணை பிரச்சாரம்தான். தொகுதிகளில் மக்களுடன் நல்ல நெருக்கத்தை அதிகரிப்பது பாமகவுக்கு எளிதான ஒன்று. அதற்கு பெருமளவு கை கொடுப்பது திண்ணை பிரச்சாரங்கள்தான். என்றாலும் இதில் பாமக தனித்து போட்டியிடுமா, அல்லது இதே கூட்டணி தொடருமா என்பதை பாமகதான் சொல்ல வேண்டும். ஒருவேளை, கூட்டணியால்தானே இவ்வளவு வம்பும் வந்தது என்பதால் தனித்து களமிறங்குமோ என்ற அறிவிப்பும் இதுவரை இல்லை என்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது!