அரசு மருத்துவமனை மாத்திரைக்குள் கம்பி.!

breaking
ராமநாதபுரம் மாவட்டம் ஏறான் துறை கிராமத்தை சேர்ந்த பாண்டி மற்றும் சக்தி ஆகியோர் வயிற்றுவலிக்காக சிகிச்சை பெற ஏர்வாடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு சிப்ரோப்லோக்சசின்  மாத்திரை கொடுக்கப்பட்டது. அந்த மாத்திரையானது இமாச்சலபிரதேசத்தில் உள்ள பயோ ஜெனடிக் டிரக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.
மாத்திரையை இரண்டாக உடைத்து பாதியாக உட்கொள்ளுமாறு செவிலியர்கள் கூறியுள்ளனர். இதை அடுத்து, சக்தி என்பவர் தனக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை பாதியாக உடைக்க முற்பட்ட போது, மாத்திரை வளைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்தி, அதை உடைத்த போது உள்ளே பின் போன்ற கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பாண்டி என்பவருக்கும் கொடுக்கப்பட்ட சிப்ரோப்லோக்சசின்  மாத்திரையை உடைத்த போது, அதற்குள்ளும் கம்பி இருந்தது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, தெரியாமல் கம்பி விழுந்திருக்கக் கூடும் என்று அலட்சியமாக பதில் சொன்னதாகவும், வேறு மாத்திரை வாங்கிக் கொள்ளுமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாத்திரையை இரண்டாக உடைத்ததால் தாங்கள் தப்பித்ததாகவும், உடைக்காமல் விழுங்கி இருந்தால் சிக்கல் ஏற்பட்டு இருக்கும் என்று சக்தியும், பாண்டியும் தெரிவித்தனர். எனவே மாத்திரையை நான்காக உடைத்து பின்னரே விழுங்கியதாகவும் அவர்கள் கூறினர்.