கொலம்பியா நாட்டுடனான எல்லையை திறக்க வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ உத்தரவு

breaking
எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார்.  எனினும், அந்நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பம் நீடித்தது.
அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் அந்த நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டார்.  இதற்கிடையில் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசூலா மக்களுக்கு தேவையான உதவி பொருட்களை வழங்க முன்வந்துள்ளன.
ஆனால் வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுத்த அதிபர் மதுரோ நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து கடந்த பிப்ரவரியில், வெனிசூலா எல்லை பகுதிகளை மூடிவிட்டார்.  இதனால் வெளிநாடுகளில் இருந்து உதவி பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டன.  மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பது தடைப்பட்டது.
இந்த நிலையில், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கொலம்பியா நாட்டுடனான எல்லையை திறக்க உத்தரவிட்டு உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நமது நாட்டின் இறையாண்மையை முழுவதும் உறுதிப்படுத்தும் வகையில், இன்று முதல் டச்சிரா பகுதியில் அமைந்த கொலம்பியா நாட்டுடனான நமது எல்லை பகுதியை திறக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறேன்.  நமது நாடு அமைதி நிறைந்தது.  நமது சுதந்திரம் மற்றும் சுய தீர்மானம் ஆகியவற்றை வலிமையுடன் பாதுகாப்பவர்கள் நாம் என்று அதில் தெரிவித்து உள்ளார்.