Take a fresh look at your lifestyle.

இலங்கையை இலக்குவைத்த சர்வதேச பயங்கரவாதம்! – ஒரு பார்வை – பூரணி

இலங்கையை இலக்குவைத்த சர்வதேச பயங்கரவாதம்

உயிர்த்த ஞாயிறு 21.04.2019 அன்று அமைதியாக விடிந்தது. கிறிஸ்தவர்களின் பெருநாள் உலகமே அமைதி வேண்டி நின்றது. இலங்கை தேசத்திலும் ஆராதனை நடைபெற்றன நேரம் காலை 08.45 ஐ நெருங்கியது. சற்று நேரத்தில் காற்றலைகளிலும் காணொளிகளிலும் செய்தி, இலங்கைத்தீவில் மூன்று தேவாலயங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள். பலபொதுமக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்தும் செய்தி வருகிறது ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மூன்றில் குண்டுத்தாக்குதல்கள் வெளிநாட்டவரகள்; உட்பட பலர் மரணம். மதியத்தின் பின்னரும் செய்தி தொடர்கிறது, தெகிவளை  ,தெமட்டகொட ஆகிய இடங்களிலும் குண்டுவெடிப்புகள். சர்வதேசத்தின் கவனமும் இலங்கையை நோக்கித் திரும்பியது. இரங்கல்களுடன் இறைவனை வேண்டி நின்றனர்

உயர்த்த ஞாயிறும் மரித்த மனிதர்களும்

இறை மகன் இயேசுவின் உயிர்த்தெழுகை. அழகிய இலங்கைத் தீவில்  கிருஸ்தவ மக்கள் மிகுந்த விசுவாசத்துடன் தேவாலயங்களிலும் விடுகளிலும் தேவ குமரனின் கிருபையை வேண்டி செபித்திருகிறாக்கள். நாடாளாவிய ரீதியில் தேவாலயங்கள் எங்கும் மக்கள் நிரந்து காணப்பட்டனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம், நீர் கொழும்பு கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டகளப்பு. சியோன் தேவாலயம் என்பவற்றிலும் ஆராதனைகள் ஆரம்பமாகின. மக்கள் அமைதியாக ஆண்டவரை தியானித்து நின்றனர்.  இந்த வேளையில் தான் தற்கொலை குண்டுதாரிகள் தேவாலயங்களுக்குள் விரைவாக நுழைகின்றனர். கட்டுவ பிட்டிய  செபஸ்தியார் ‘  தேவாலயத்தில் முதலாவது தற்கொலை குண்டு காலை 08.45 மணிக்கு வெடிக்கவைக்கப்படுகிறது. இதில் 112 அப்பாவிகள் பொது மக்கள் உடல் சிதறி பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சற்று நேர இடைவேளையின்பின் கொச்சிகடை புனித அந்தோனியார்ஆலயத்திலும் தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்க வைக்கின்றான். இதில் 70 உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. 250க்கும் மேலானோர் படுகாயம் அடைந்தனர். அடுத்து 09.00 மணி அளவில் மூன்றாவது குண்டுதாரி மட்டக்களப்பு சியோன் தேவ ஆலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்துகின்றான். இதிலும் 30 மக்கள் உயிர் இழக்கின்றனர.; 70 கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அடுத்து சமநேரத்தில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோடேல்களான சங்கிரில்லா, சினமன் கிராண்ட்ஸ், கிங்ஸ்பெர்ரி ஆகிய ஹோட்டல்களிலும் தற்கொலை குண்டு வெடிப்புகளும் நிகழ்த்தப்பட்டன. இதிலும் 30 கும் மேற்பட்ட,  வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர் உயிர் இழந்தனர் 08.45 – 9.30 மணிக்கிடையில் மூன்று தேவ ஆலயங்கள் மூன்று பெரிய ஹோட்டேல்களில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. தொடர்ந்து மதியம் 1.30 மணி அளவில் தெகிவளை மிருகக் காட்சிச்சாலைக்கு அருகில் உள்ள விடுதியிலும் பிற்பகல் 2.15 மணி அளவில் தெமட்டகொடவிலும் பொலிசாரின் தேடுதல் நடவடிக்கைகளின்போது தற்கொலை குண்டுதாரிகள் இருவரினால் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. இதில் இரண்டு சிறுவர்கள் மூன்று பொலீஸ்காரர்கள் உயிர் இழந்தனர். இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடந்தேறியது.

ஐ .எஸ் . எஸ் அனுசரணையில் தௌகித் ஜமாத்

தௌகித் ஜமாத் எனும் அடிப்படைவாத அமைப்பின் தலைவரான முஹமத் சஹிரான் என்பவரே இத் தாக்குதல்களுக்கு தலைமைப் பொறுப்பாளி ( இவர் சங்கிரில்லா விடுதியின் தற்கொலைதாரிகளில் ஒருவர் ) . இதன் செயற்படு தளமாக ஐஎஸ்ஐஎஸ் என்ற சர்வதேச பயங்கரவாதம் இருந்துள்ளது. தாக்குதல் நடந்த இரு நாட்களில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைமை இதற்கு உரிமை கோரி இருந்தது. பத்து வருடங்களின் பின் இரத்தஆறு ஓடி இருநத்து. மரண ஓலங்கள் நிறைந்தன. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியோர் என குருதி வெள்ளத்தில் துடித்தனர். இலங்கையை புரட்டிப் போட்டது இக்குண்டு வெடிப்புகள். உயிர்ப்பு நாள் இறப்பு நாள் ஆனது. 250 பேருக்கு மேல் மரணம் அடைந்தனர். 500 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அடையாளம் காணப்பட்ட 31 பேரும் அடையாளம் காணப்படாத 14 பேரும் 45 வெளிநாட்டவர்களும் மரணம் அடைந்தனர். 45 சிறுவர்கள் மரணம் அடைந்ததாக யுனிசெவ் நிறுவனம் அறிக்கையிட்டு இருந்தது.

பலமற்றிருந்த பாதுகாப்பு நிலைமை

தாக்குதல் நடைபெற்றபோது சிங்கப்பூரில் இருந்த அரச தலைவர் நள்ளிரவு நாடு திரும்பினார். குண்டுவெடிப்புகள் பற்றி ஆராய தனிக்குழு நியமிக்கப்பட்டு, நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. எங்கும் பதற்றமும் பீதியும் நிலவியது. நாடு ஒரு இருண்ட நிலைக்கு தள்ளப்பட்டது. குண்டு தாக்குதல் நடைபெறலாம் என அரசதேசிய புலனாய்வுச் சேவை, மற்றும் இந்திய உளவுப் பிரிவு என்பன தெரிவித்திருந்தும்,  அரசு அதனை கவனம் கொள்ளாமை ஏன் என்பது கேள்வியாகவே உள்ளது. மேலும் காத்தான்குடியில் ஏப்ரல் 16-ஆம் தேதி நடந்த பரீட்சார்த்த குண்டுத் தாக்குதல், புத்தளம் வனாத்தவில்லுப் பகுதியில் ஜனவரியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள், இதன் ஆரம்பங்களைகுறித்துக் காட்டுகின்றன. இதேபோன்று 2018 நவம்பரில் வவுணதீவு சோதனைச் சாவடியில் இரு பொலீசார் கொல்லப்பட்டது சஹ்ரானின் சாரதி முகம்மது சமீர் ஆதம் என்பவராலேயே என்பது அவர் மூலம் வெளிப்பட்டுள்ளது. இதன்படி அரசு பலவகையிலும் அசட்டையாக இருந்தமை அறிய வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு கடமைகள் தூக்க நிலையில் இருந்துள்ளது. ஆரம்பத்தில் இவை கண்டறியப்பட்டு இருந்தால் இந்த பேரழிவு தடுக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குற்றத்திற்கு சம்பந்தமில்லாத முன்னாள் போராளிகள் இருவர் வீண்பழி சுமத்தலுக்கும், சிறை அனுபவிப்பிற்கும் உள்ளாகாது தடுத்திருக்கலாம். நின்று நிதானித்து நீண்டகாலம் திட்டமிட்டு பெரும்தொகையான பணப்புழக்கத்துடன்,  வெடிபொருட்கள், ஆயுதங்கள், வாகனங்கள் என்பவற்றுடன் தாராள –  சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ள, நடைபெற கண்கள் மூடி இருந்தது யார் குற்றம்? இதன் பின்புலம் என்ன? அரசியல்வாதிகள் இதில் பேசும் பொருளாய் உள்ளனர.;

தீவிரவாதிகளின் கோட்டையாக கிழக்கு மாகாணம்

பாரிய எட்டு குண்டுவெடிப்புகளை தொடர்ந்து 26.4.2019 அன்று அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் தேடுதலின் போது பொலீஸ் – ஆயுதக் குழு மோதலில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியதில் 6 சிறுவர்கள் உட்பட 16 பேர் சாவ டைந்தனர்.  இதில் சஹ்ரானின் தந்தை, இரு சகோதரர்கள் உள்ளடங்குவர். மனைவியும் பிள்ளையும் காப்பாற்றப்பட்டனர். ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் இதற்கும் உரிமை கோரி இருந்தனர். இவர்களின் கோட்டையாக கிழக்கு மாகாணமே அமைந்திருக்கிறது. இந்த நிலையிலும் பல தற்கொலைதாரிகளும் தொடர்புடையவர்களும் கைதாகினர். தொடர்ந்தும் நாடாளாவிய தேடுதல்கள் நடைபெற்றன. 10,000 புலனாய்வாளர்களும்  இலட்சம்படையினரும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். சட்டம்-ஒழுங்கை பேண பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அரச தலைவர்கள் கூற்றுபடி தடை செய்யப்பட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சுமார் 140 பயங்கரவாதிகளில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 69 பேர் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் கீழும், 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். 45 பேர் சிரியாவில் பயிற்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடந்த 2,3 கிழமைகளுக்குள் நிலைமை கணிசமான அளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. பாரிய தேடுதல்கள் மூலம் தீவிரவாதிகளின் ஆயுதங்கள், பணம், வாகனங்கள், வெடிப்பொருட்கள் இன்னும் தடயங்களை படையினர் கைப்பற்றினர். (மட்டக்குளி, வெள்ளவத்தை, நிந்தவூர், நுவரெலியா, சம்மாந்துறை, சாய்ந்தமருது, கொம்பனித்தெரு, வானத்தவில்லு, திருமலை,மஸ்கெலியா, கொட்டாஞ்சேனை, வீரபுரம், பதுளை ,தியத்தலாவ, வெலிமட, விடத்தல் தீவு, மாந்தை, கோவில் குளம் இன்னும் பல இடங்களில் ஆங்கங்கே இவைகள் கைப்பற்றப்பட்டன). சில பள்ளிவாசல்களில் சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தடை

2019 ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க அவசரகால தடைச்சட்டத்தின் கீழ் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம்‘ , ‘ இப்ராஹிம் செய்லாணிஇயக்கம்‘  உட்பட மூன்று அமைப்புகள் தடை செய்யப்பட்டன. ஈராக், சிரியாவில் ட்ரோன்கமரா மூலம் நடத்தப்படும் (சாத்தானின் தாய்) குண்டுத்தாக்குதலை போன்று இங்கும் நிகழாதிருக்க ட்ரோன்கமராக்களின் பறப்பும் தடை செய்யப்பட்டது.

தற்கொலையாளிகள்விபரம்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், அலாவுதீன் அகமத்மூவாஸ் – மட்டக்குளி

நீர்கொழும்பு கட்டுவ பிட்டிய தேவாலயம்

கச்சிமொகமட்மொகமட்கல்துன்-வாழைச்சேனை

மட்டுநகர் சீயோன் தேவாலயம்

மொகமட்.ஆசாத்- காத்தான்குடி

சங்கிரில்லா ஹோட்டல்

  1. மொகமட்காசிம் மொகமட்சஹ்ரான்
  2.  இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்தெமட்டகொட

சினமன் கிராண்ட்ஸ் ஹோட்டல்: இப்ராஹிம் இன்சாப் அகமட் (செம்பு வர்த்தகர்) – தெமட்டகொட

கிங்ஸ்பெரி ஹோட்டல்: மொகமட்அனஸ் மொகமட்முபாரக் – கொழும்பு 12

தெகிவளை அருகில் ரொப்பிக்கல்விடுதி: அப்துல்லதீப் ஜமீல் மொகமட் வெல்லம் பிட்டிய

தெமட்டகொட: பாத்திமாஇல்காம் தெமட்டகொட

பெருமளவு கத்தோலிக்க மக்களை காவு கொண்ட குண்டுவெடிப்புகள் பலரது மனதையும் பாதித்து இருந்தன. பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் இந்த சூழலில் மிகவும் நிதானமாகவும் விரைவாகவும் செயற்பட்டு அமைதி பெற வழிகாட்டினார்.

இலங்கையில் ஐ எஸ் ஐ எஸ்

உலக பயங்கரவாதியான ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஈராக் சன்னிமுஸ்லிம்களால் 2013 இல் உருவாக்கப்பட்டது. மோசூலைதளமாக கொண்டே தலைவர் அல்அபுபக்கர் பக்தாதியினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிரியாவையும் தாய் நாடான ஈராக்கையும் பலமாக எதிர்த்த இந்த இயக்கம் தற்போது ஈராக்கில் முற்றாக பலம் இழந்துள்ளது. சிரியாவிலும் கணிசமான பலம் இழக்கப்பட்டுள்ளது. பொதுவாக மத்திய கிழக்கில் பலம் இழந்து வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தனது செயற்பாடுகளை செல்லுபடியாக்க ஆசியாவை தேர்ந்தெடுத்து ஒப்பீட்டளவில் பலம் குறைந்த இடங்களை (அதாவது வல்லரசு நாடுகளின் பலங்கள் மட்டுப்பாடான தொடர்புடைய நாடுகளை) தேடி காலூன்ற பார்க்கலாம். அதன் முயற்சியாகவும் இலங்கைக்கு ஊடுருவி இருக்கலாம். இதற்கான ஆரம்பமாக 2016 இல் இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி என்ற பொருளில் பேசப்பட்டதை கவனம் கொள்ளலாம்.

குற்றச்சாட்டுகள்

நாட்டில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலைமைக்கு அரசுத்தலைவர், பிரதமர் , பாதுகாப்புச் செயலர், பொலிஸ்மாஅதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எச்சரிக்கையை அலட்சியம் செய்த பொலிஸ்மாஅதிபர் பதவி விலகவேண்டும் என அமைச்சர் ராஜிதவும், பாதுகாப்பு தரப்பின் பலவீனமே காரணம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் அரசினதும் புலனாய்வு துறையினதும் பலவீனங்களே காரணம் என சரத் பொன்சேகாவும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். மேலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டிற்கு கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவின் ஆதரவே காரணம் என்று பிரதமரும் பதவி துறக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவும், முஜிபுர் ரஹ்மான் எம.;பிக்கும், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாதிக்கும் குண்டு வெடிப்புடன் தொடர்பு உண்டு என விமல் வீரவன்சவும், றிசாத், முஜிபுர், அஸாத் சாலி, ஹிஸ்புல்லா இன்னும் முக்கிய அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனர். இவர்களின் பதவிகளை பறித்து கைது செய்க என மஹிந்த அணியினரும் சாடியிருந்தனர். மேலாக அரசின் செயற்பாடுகளில் திருப்தி கொள்ள முடியாதென பேராசிரியர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் தெரிவித்திருந்தார்.

தாக்குதலுக்கான காரணப்படுத்தல்கள்

நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலுக்கு பழிவாங்கலா? போதை வஸ்து பாவனைக்கு எதிரான செயற்பாட்டிற்கு பதிலடியா? என இன்றும் பலவாறான கேள்விகள் காரணிக்கு தேடப்பட்டன. கிறிஸ்காட்மசூதி தாக்குதலுக்கும் இலங்கையின் குண்டுத் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஒரு புலனாய்வுத் தகவலும் இல்லை என பதில் அளித்து நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென்தெளிவுபடுத்தியிருந்தார். இந்த வேளையில்தான் சிரியாவின் பகுஸ்தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக 5 ஆண்டுகளின் பின் காணொளியில் வெளித்தோன்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல் பக்தாதி அறிவித்திருந்தார். மதுரையில் அடிபட்டவருக்கு மானாமதுரையில் மீசை துடித்ததுஎன்ற இந்திய பழமொழி உண்டு. இலங்கை அரபு தேசம் அல்ல, மூவின மக்கள் வாழ்கின்ற நாடு. உள்நாட்டு போர் ஓய்ந்திருக்கும்  நிலையில் சர்வதேச தீவிரவாதம் (திசை திரும்பி) இலங்கையை தாக்கியது ஏன்? தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியா, மாலைதீவு, இலங்கை போன்ற நாடுகளில் ஒன்றில் காலூன்றி பலப்படுத்தும் செயற்பாடா ?

கண்டனங்கள், அஞ்சலிகள், இரங்கல்கள்

ஐநா பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. புனித நாளில் வழிபாட்டிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் வருந்தத்தக்கது என பொதுச் செயலாளர் குத்தரேவ்கூறியிருந்தார். பன்னாட்டு ஊடகமான ரொய்ட்டர்செய்தி ஸ்தாபனம் கொச்சிக்கடை தேவாலய இயேசுவை முகப்பிட்டு அடையாளப்படுத்தி அஞ்சலித்தது. திருத்தந்தை போப்பாண்டவரால் விசேட பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது. ஈபிள்கோபுர விளக்குகள் அணைத்து அஞ்சலிக்கப்பட்டது. உயர்ந்த இடத்தில் இலங்கையின் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மனிதநேயம் மீதான தாக்குதல் என ஒபாமா வருத்தம் தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா,பிரான்ஸ், பிரிட்டன், கனடா ஆஸ்திரேலியா நியூசிலாந்து பாகிஸ்தான் ரஸியா மத்திய கிழக்கு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. உள்நாட்டில் பொது நிறுவனங்கள் மத அமைப்புகள் அரசியல்வாதிகள் ஆன்மிகவாதிகள் கண்டனங்கள்,  இரங்கல்கள் வெளியிட்டனர். இப்படி ஒரு துயரம் இனி வேண்டாம் என யாழ் ஆயர் கவலை தெரிவித்தார். முழு உலகையும் அதிர்வுக்கு உள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு மன்னார் ஆயர் கண்டனம் தெரிவித்திருந்தார். முஸ்லிம் மதத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் பேராயரிடம் வருத்தம் தெரிவித்து இருந்தனர். நாடெங்கும் மக்கள் அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும் நடத்தினர்.

நடவடிக்கைகள்

தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க சமூக வலைதளங்கள் (சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் இரண்டு மூன்று தடவைகள்) முடக்கப்பட்டன. வழிபாட்டிடங்கள், விமான நிலையங்கள், போக்குவரத்து சேவைஇடங்கள் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறப்பது பிற்போடப்பட்டது. ஏப்ரல் 22, 23 ம் தேதிகள் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது. சோதனைகள் எங்கும் முடுக்கிவிடப்பட்டன. பொலீஸ் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டன. 22.04.2019 நள்ளிரவில் இருந்து அவசரகால சட்டம் நடைமுறைக்கு வர விசேட அறிக்கை கொண்டுவரப்பட்டது. 24.04.2019 தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. மே தினக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. உள்நாட்டு யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய சோதனைச்சாவடிகள் பல மீளவும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.  குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களிற்கு ஒரு மில்லியன் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபா வரையான கொடுப்பனவுகளும் வழங்க தீர்மானிக்கப்பட்டது. மருத்துவமனைகள் பலத்த கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டன. தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனை கதிர்வீச்சு பிரிவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டது. பர்தாவை தடை செய்யும் பிரேரணை கொண்டுவர பரிசீலிக்கப்பட்டது.

ஒப்பீடுகள்

விடுதலைப்புலிகள் கூட இப்படி ஒரே நாளில் குண்டுவெடிப்புகள் செய்ததில்லை என ஏ. எச். எம் பௌசியும் குண்டு வெடிப்புடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை இறுதிப் போர் காலத்தில் கூட இதுபோன்ற தாக்குதல்களை அவர்கள் மேற்கொள்ளவில்லை, குண்டு தாக்குதலுக்கு பன்னாட்டு தீவிரவாத அமைப்பே காரணம் என ஜனாதிபதி ஆலோசகர் சீரால் லக்திலகவும்‘  அடிப்படைவாதிகளின் போராட்டத்தை விடுதலைப் புலிகளின்போராட்டத்துடன் ஒப்பிட முடியாது என கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனும், விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளே, தமது இனத்திற்காக கொள்கையுடன் இறுதிவரை போராடியதால்தான் புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தனர். அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்ல என ஜனாதிபதியும் விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடும்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் படுமோசம் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தவும் தெரிவித்திருக்கின்றனர்.

மட்டு பல்கலைக்கழகமும் மதம்சார் கல்வியும்

சுமார் 24 லட்சம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற இலங்கையில் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப அரபு கற்கைகள், சட்டங்கள் தனியானவை.  இவர்களுக்கான தனியார் பல்கலைக்கழகம் ஒன்று 2013இல் மகாவலிதிட்டக்காணியிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 35 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப் பெற்றது  Batti Campus PVT Ltd /  Sharia Campus.

இதில் அரபு, மதம் சார் கல்வி மூலம் அடிப்படைவாத எண்ணங்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு புகுத்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா இதற்கு மூலமாக செயற்பட்டுள்ளார் என முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) பதிவிற்குள் கொண்டு வர வேண்டும். என பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. இதைவிட பிரிவேணாக்கல்விபோன்று மதரசாக்கல்வியும்கல்வி அமைச்சுக்கு வரவேண்டும் என்றும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன தவிர இஸ்லாமிய பாடசாலைகளிலும் மதரசாக்களிலும் போதிக்கும் 800 வெளிநாட்டவர்கள் வெளியேற பணிக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்திற்கானதூண்டல்

குண்டுவெடிப்புகள் நடைபெற்ற பின்பு பாதுகாப்பு படையினரால் சோதனைகளும் கண்காணிப்பும் கடுமையாக பின்பற்றப்பட்டன. இரண்டு கிழமைகள் வரை மிக நிதானமாக வழிநடத்தப்பட்ட சூழலின் பின்னர் 5.5.2019 இல் இனமத முரண்பாடுடைய தாக்குதல்கள் நீர்கொழும்பில் நடைபெற்றன. இதில் முஸ்லீம்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.  நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து 13.5.2019 இல் வடமேல் மாகாணத்தில் வன்முறைகள் தூண்டப்பட்டன. இங்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன இதன் பின்னணியில் அரசியல்வாதிகளின் செயல்பாடு உள்ளதாக நம்பப்படுகிறது. நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் பிரச்சினைகள் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கின்றன. அத்துடன் இத்தகைய நிலைமைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறை போக்குவரத்து துறையில் மிகுந்த பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது எனலாம்.

இலங்கையின் இன்றைய இந்த நிலைமை முக்கியமாக தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வினை பின்தள்ளியுள்ளது எனலாம். போதைப்பொருள் தடுப்புமுனைப்பினையும் இரண்டாம் பட்சமாக்கியுள்ளது. அத்துடன் உருவாக்கப்பட்டுள்ள அவசர கால தடைச் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சினைகள் எதுவும் நடைபெறாத வடபகுதியில் கடுமையாக பாய்ந்துள்ளது. கடலுக்குசெல்வோர் கடற்படையிடம் ஆவணங்கள் ஒப்படைத்தல், எந்தப் பயணத்திலும் ஆள்உறுதிப்படுத்தல்ஆவணம் வைத்திருத்தல், போன்ற கட்டமைப்புகள் மேலும் அதிகரித்த சோதனைச்சாவடிகள் பல்கலைக்கழக தேடுதல,; மாணவர்கைதுகள் இன்னும் பலவற்றைக் குறிப்பிடலாம். யுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் ஆகியும் நித்தம் துன்புறும் மக்கள் வலிகளுடனேயே வாழ்கின்றனர். எந்த (செயல்) வினையும் தினையும் விதைத்தவன் அறுவடையாகும். எனவே இலங்கையில் நடந்த சர்வதேச பயங்கரத் தாக்குதல் எல்லா வழியிலும் சிறுபான்மை மக்களை பெரும்பாலும் பாதித்துள்ளது என்பது யதார்த்தம்.

தாரகம் இணையத்திற்காக

-பூரணி-