சிங்கள காவல்த்துறை துணையோடு காத்தான்குடியில் 120 வீடுகளை கொளுத்திய சஹ்ரான் .?

breaking
2017ஆம் ஆண்டில்  காத்தான்குடியில் பாரம்பரிய முஸ்லிம் மக்களின் 120 வீடுகளை சஹ்ரான் தீயிட்டுக் கொளுத்தியிருந்ததுடன் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி தனது ஆளுகைக்குள் அவர்களை வைத்திருந்துமுள்ளார். இவ்வாறு  நேற்றைய தினம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையான  அசாத் சாலி தெரிவித்தார்.அவர் தனது சாட்சியப் பதிவில் மேலும் தெரிவிக்கையில் மொஹமட் சஹ்ரான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். அதனால் சஹ்ரானின் பேச்சுக்களுக்கு அந்த பகுதி மக்கள் செவி மடுத்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனாலேயே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாத்திரமன்றி மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மொஹமட் சஹ்ரானுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார். தென் தமிழீழம்  மட்டக்களப்பு காத்தான்குடியில் சஹ்ரானுக்கும், அவரது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் எதிராக முஸ்லிம் மக்களே முறைப்பாடுகளை செய்தும், அவற்றை கவனத்தில் எடுக்காத  சிங்கள பொலிஸார், தீவிரவாதி சஹ்ரான் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் நண்பர்களாகவே இணைந்து செயற்பட்டிருந்ததாகவும் அசாத் சாலி, குற்றஞ்சாட்டினார். 2017ஆம் ஆண்டில்  காத்தான்குடியில் பாரம்பரிய முஸ்லிம் மக்களின் 120 வீடுகளை சஹ்ரான் தீயிட்டுக் கொளுத்தியிருந்தார். அந்த சம்பவங்கள் தொடர்பில் சிங்கள பொலிஸாரும் விசாரிக்கவில்லை. மக்கள் வீதியில் இறங்கி சஹ்ரானை கைது செய்வதற்கான ஆர்ப்பாட்டங்களை செய்தார்கள். அவரைக் கைது செய்ய முயற்சித்த சிங்கள பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார் என மேலும் அவர் குறிப்பிட்டார்.