கோத்தா 500 மில்லியன் தருவதாக பேரம் பேசினார்: தெரிவுக்குழு முன் போட்டுடைத்த அசாத் சாலி

breaking
  தமிழினத்தை இன அழிப்பு செய்த ஶ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தவறான செயல்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டுமல்ல, அவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபா பணம் தருவதாக பேரம் பேசினார் என நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் நேற்று போட்டுடைத்தார் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாட்டில் ஆட்சி ஒன்று இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ள முடியாத காலகட்டத்தில் என்னை சாட்சியத்திற்கு அளித்துள்ளீர்கள்.என்றாலும், நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு அடிப்படைவாதி என்ற ரீதியில் எனது பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் இது குறித்து பல தடவைகள் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளேன். 2014இல் இருந்து பல தடவைகள் இது குறித்து பேசப்பட்டுள்ளன. கிழக்கில் உள்ள பல்கலைக் கழகம் ஷரியா பல்கலைக் கழகம் அல்ல. ஷரியாவை தவறாக விளங்கிக்கொள்ள வேண்டாம். ஷரியா என்பது எமது வாழ்க்கை. இது குறித்து நீங்கள் அனைவரும் ஏன் தவறான கருத்துக்களை கொண்டு செல்ல முயற்சித்து வருகிறார்கள்? கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஷரியா பிரிவு உள்ளது. அது தவறில்லை. அதேபோல ஷரியா எமக்கு கண்டிப்பாக வேண்டும். இது உங்களுக்கு அவசியம் இல்லை. ஆனால் நமக்கு ஷரியா கண்டிப்பாக வேண்டும். எமது வாழ்க்கையுடன் ஷரியா கலந்துள்ளது. அதனை விடுவித்து வாழ முடியாது. ஏன் நீங்கள் 21ஆம் திகதி தாக்குதலுக்கும் முஸ்லிம் கலாச்சாரத்துக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள் என புரியவில்லை. 21ம் திகதி தாக்குதலுக்கும் முஸ்லிம் திருமணத்திற்குமிடையில் என்ன தொடர்புள்ளது? இலங்கையில் நீண்டகாலம் முஸ்லிம் சட்டம் உள்ளது. அவை இன்று நேற்று உருவாக்கப்பட்டவையல்ல. அதை இப்போது ஏன் நீக்க வேண்டும்? முஸ்லிம் சட்டம் எமக்கு அவசியம். இந்த தாக்குதலுக்கு 1995 இல் இருந்து இன்று வரையிருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். இந்த அடிப்படைவாதத்தை பற்றி 2000ம் ஆண்டிலிருந்து தெரிவித்து வருகிறேன். அப்போதிருந்த5 பாதுகாப்பு செயலர்கள் இருந்தனர். அவர்களுக்கு உரிய காரணிகளை வழங்கினேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. காவல்துறையில் பல முறைப்பாடுகளை நாம் செய்தோம். முன்னைய ஆட்சியாளர் காலத்தில் காத்தான்குடியில் ஐ.எஸ் அமைப்பு பலமாக செயற்படுகிறது என கோத்தபாய ராஜபக்சவிற்கும், ஏனைய அதிகாரிகளிற்கும் தெரிவித்தேன். ஆனால் கோத்தபாய ராஜபக்சவிற்கும், தௌஹீத் ஜமாஅத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பிருந்தது. தௌஹீத்தை பற்றி பேசியதால்தான் நான் கைது செய்யப்பட்டேன். அது மட்டுமல்ல அவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாமென எனக்கு அறிவுறுத்தினர். 500 மில்லியன் பணம் தருவதாக பேரம் பேசினர். தேர்தலில் களமிறங்குவதாக இருந்தால் அதில் 200 மில்லியனை செலவழிக்கவும் ஆலோசனை சொன்னார்கள். கடந்த காலங்களில் காத்தான்குடியில் நடந்த பல அசம்பாவிதங்களிற்கு சஹ்ரான் காரணமாக இருந்தார். இது குறித்து முஸ்லிம் மக்கள் முறைப்பாடுகள் செய்தபோதும், பொலிசார் சஹ்ரான் பக்கமே நின்றனர். சஹ்ரானை கைதுசெய்ய கிழக்கில் ஆர்ப்பாட்டம் கூட நடத்தினார்கள். தௌஹீத்தும், பொலிசாரும் ஒன்றாகவே செயற்பட்டனர் என்றார்.