Take a fresh look at your lifestyle.

முன்னர் சமஷ்டி கேட்டவர்கள் இன்று சமுர்த்தி கேட்கிறார்கள்: ஆனந்தன்

“முன்னர் சமஷ்டி கேட்டவர்கள் இப்போது சமுர்த்தி கேட்டுத் திரிகிறார்கள். அரசோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே தாம் செய்கின்றார்கள்” என தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா முன்னிலையில் சாடினார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று 3.30 மணியளவில் இடம்பெற்ற தமிழரசு கட்சி ஆதரவு வாராந்தப் பத்திரிகையான புதிய தமிழ் நாதம் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

“இன்னும் நான்கு மாதத்தில் இன்னுமொரு ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்க இருக்கின்றோம். ஜனாதிபதி, பிரதமர் எமக்கு அரசியல் தீர்வுக்கு உதவுவார்கள் என்று நம்பி இருந்தோம். ஆனால் நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதும் எதுவும் நடக்கவில்லை.

சிவசக்திஜனதிபதித் தேர்தல் ஒன்றை எதிர்நோக்க இருக்கின்றோம். அதற்காக மக்கள் வரிப்பணத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சமுர்த்தி, கம்பெரலிய போன்ற திட்டங்களைச் சிலர் காவித்திரிகின்றார்கள். சமஷ்டி கேட்டவர்கள் இப்போது சமுர்த்தி கேட்டுத் திரிகின்றார்கள்.

அதனை விட முன்னைய அரசோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே செய்கின்றார்கள்” என்றார்.

இந்த வெளியீட்டு நிகழ்வில் பிரத விருந்தினராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி, சிறப்பு விருந்தினராகச் சி.சிறிதரன் எம்.பி ஆகியோர் உட்படப் பலர் பங்கேற்றனர்.