ஆளுநர் மாளிகைக்கு எடப்பாடி சென்ற ரகசியம் என்ன .?

breaking
காலையில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திமுடித்த எடப்பாடி  நேற்று மாலையே ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்து திரும்பினார். அதன்பிறகு தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் நேற்று அமித் ஷாவைச் சந்தித்தனர். இந்நிலையில், இன்று மாலை எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்துள்ளனர். இதுகுறித்து எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் ``ஆட்சிக்கு சிக்கல் இருப்பது போன்ற தோற்றம் கடந்த சில நாள்களாகவே உலவி வந்தது. அதை முறியடிக்கும் விதத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி சர்ச்சைக்கு முடிவுகட்டினார். அதே போல் விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட உள்ளது. அப்போது சபாநாயர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தி.மு.க வினரால் கொண்டுவரப்பட உள்ளது. இந்நிலையில் தி.மு.க தரப்பு அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை இழுப்பதாகத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி புகார்கள் வந்து கொண்டே இருந்தன.
இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட எடப்பாடி தனது அரசுக்குப் பின்னால் இருக்கும் எம்.எல்.ஏக்கள் விவரங்கள் குறித்தும், ஆட்சிக்கு தி.மு.க வினர் ஏற்படுத்திவரும் சிக்கல்கள் குறித்தும் ஆளுநரைச் சந்தித்து முறையிட முடிவு செய்தார். மேலும், தமிழக டி.ஜி.பியின் பதவிக்காலம் இந்த மாதத்தோடு முடிவடைய உள்ளது. புதிய டி.ஜி.பியாக ஜாபர்சேட்டை கொண்டுவர எடப்பாடி விரும்பினாலும் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இதைச் சரிக்கட்டவே ஆளுநர் மூலம் காய்நகர்த்த திட்டமிட்டார் எடப்பாடி. மற்றொருபுறம், ஆளுநரின் செயலாளராக உள்ள ராஜகோபாலை அடுத்த தலைமைச் செயலாளர் பதவிக்குக் கொண்டுவருவது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. பி.ஜே.பி தரப்புடன் தங்களுது இணக்கத்தை புதுப்பித்துக் கொள்ளவும் ஆளுநர் சந்திப்பு அவசியம் என்று எடப்பாடி முடிவு செய்த பிறகே இந்த அதிரடியான சந்திப்பு நடைபெற்றுள்ளது” என்கிறார்கள். மற்றொரு தரப்பில் ஏற்கெனவே எழுவர் விடுதலை குறித்த முடிவு ஆளுநர் கைவசம் இருக்கிறது. இது குறித்து ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரம் குறித்தும் எடப்பாடி தரப்பு ஆளுநரிடம் கேட்டுள்ளது. அதற்கு ஆளுநர் “மத்திய அரசிடமிருந்து எந்த சிக்னலும் இதுகுறித்து வரவில்லை என்பதால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்று கையை விரித்துவிட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். ஒரே நாளில் கட்சிக்குள் இருந்த குழப்பத்திற்கும், ஆட்சிக்கு தி.மு.க வைக்க இருந்த நெருக்கடிக்கும் முடிவு ஏற்படுத்தவே ஆளுநர் சந்திப்பை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் எடப்பாடி.