மில்ஹானை தங்களிடம் அனுப்பும்படி கேட்கும் ஶ்ரீலங்காவும், இந்தியாவும்: தலையை பிக்கும் சவுதி

breaking
  உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆயுதப்பிரிவிற்கு பொறுப்பாக இருந்த மொஹமட் மில்ஹான் என்பவரை சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலவுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் சவுதி அரேபியாவில் வசித்து வந்த மில்ஹான் அந்த நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இலங்கை பொலிசார் வழங்கிய தகவலின் பேரிலேயே அவர் கைதாகினார். தற்போது சவுதி அரேபிய பயங்கரவாத தடுப்பு மையத்தில் மில்ஹான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அவரை இலங்கைக்கு அழைத்து வரும் முயற்சிகள் இராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, மில்ஹானை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால், அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல் நீடிக்கிறது. மில்ஹான், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்னர் சவுதிக்கு உமராவிற்கு சென்றிருந்தார். தாக்குதலில் அன்று அவர் நாட்டுக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அவர் இலங்கைக்கு வரவில்லை. அவரது பயணப்பொதி மட்டுமே இலங்கைக்கு வந்தது. விமானநிலையத்திற்கு வந்த மில்ஹான், தன்னை சிஐடி தேடுவதை அறிந்து கொண்டு சவுதியிலேயே ஒளிந்திருக்க முற்பட்டபோது அந்த நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். யுத்தகாலத்தில் காத்தான்குடியில் இயங்கிய துணை ஆயுதக்குழுவின் அங்கத்தவராக செயற்பட்ட மில்ஹான், ஆயுதப்பயிற்சி பெற்றிருக்கிறார். வவுணதீவு பொலிஸ்காரர்கள் இருவரை கொன்ற தாக்குதலை இவரே நெறிப்படுத்தியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.