தமிழகத்தில் ஶ்ரீலங்கா குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது!

breaking
  தமிழகத்தின், கோவை மாவட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு அமைப்பினர், ஶ்ரீலங்கா குண்டுவெடிப்பு மற்றும் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையோர் கேரளா மற்றும் தமிழகத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று கோவையில் ஏழு இடங்களில், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய், பொன் விழா நகர் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தினர். கோவையில் நடைபெற்ற சோதனையில்,ஶ்ரீலங்கா குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதின் இலங்கை குண்டுவெடிப்பை நடத்திய சஹ்ரான் ஹசீமுடன் சமூக வலைதளத்தில் தொடர்பில் இருந்ததை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்தை சேரந்த ஆறு இளைஞர்கள், ஐ.எஸ் அமைப்பின் குழுவாக செயல்பட்டு வந்ததாகவும், இதற்கு அசாருதின் தலைவராக செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் சமூக வலைதளம் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு,ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சோதனைியல் 14 செல்போன்கள்,29 சிம்கார்டுகள்,10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு,4 ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்துள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள், கைது செய்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.