போராட்டத்தை பலவீனப்படுத்த சிலர் முயற்சி – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்.!

breaking
தமிழர் தாயகப்பகுதியில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் இன்று பல அரச சலுகைகள் வழங்க்படுகின்றது என லிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி லீலாதேவி தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் இன்று பல அரச சலுகைகள் வழங்க்படுகின்றது. அரசிற்கு பல்வேறு வழிகளிலும் உதவும் எமது அரசியல் தலைமைகள் தற்போது தேர்தல் நெருங்குகின்றபோது கிணறு கட்டி தருதல் என பல்வேறு உதவிகளை செய்கின்றோம் எனவும் தெரிவித்து வருகின்றனர். காணாமல் போனோர் அலுவலகத்தினால் வழங்கப்படும் உதவிகளைக்கூட பெற்றுக்கொள்ள விரும்பாத பலர் உள்ள நிலையில் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் வகையிலும் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையிலும் இவ்வாறு செயற்படுகின்றனர். பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், இன்று கம்பெரலிய, சமுர்த்தி போன்றவற்றை வழங்குவதில் எமது அரசியல்வாதிகள் ஆர்வம் கட்டுவது கவலை அளிக்கின்றது. பல்வேறு சந்தர்ப்பங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது வங்கி கணக்குகளை நிரப்பிக்கொள்கின்றனர். முஸ்லிம் தலைவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கின்ற போதிலும் அவர்களது சமூகத்திற்கு ஓர் பிரச்சினை ஏற்படுகின்றபோது ஒற்றமையாக தீர்மானத்தை ஏற்றுகின்றனர். இவ்வாறான நிலை எமது அரசியல் தலைமைகளிடம் இல்லை.” என அவர் குற்றம் சாட்டினார்.