உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு பாதுகாப்பு அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்- துமிந்த

breaking
  ஶ்ரீலங்கா: உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் பொறுப்பேற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமல்ல யாராக இருந்தாலும் அமைச்சரவையைக் கூட்டாதது தவறுதான். ஆனால், அதற்காக உரிய நேரத்தில் கடமைகளை செய்திருக்க வேண்டிய அரச அதிகாரிகள் ஜனாதிபதி மீது மாத்திரம் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தில் தலையிடாவிட்டாலும் அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அறிந்து கொள்வதற்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதற்காக புலனாய்வு தகவல்களை ஊடகங்களில் வெளிப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீயை மூட்டிவிட்டு தற்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளால் அமைச்சரவை கூடாமல் இருப்பது மக்களையே பாதிக்கும். எனவே பிரதமரும், ஜனாதிபதியும் சுமூகமான கலந்துரையாடலின் மூலம் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காண வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.