மைத்திரியை திட்டமிட்டு சிக்க வைக்கும் ஹிஸ்புல்லாஹ்: துமிந்த குற்றச்சாட்டு

breaking
  இனஅழிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது வெற்றிக்காக சஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை இடம்பெறும் விசாரணைகளுடன் தொடர்பற்றதாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் மாத்திரமல்ல எந்த தேர்தலாக இருந்தாலும் மைத்திரியானாலும், மஹிந்தவானாலும் வேறு யார் போட்டியிட்டாலும் அவர்களுக்காக செயற்படுவதற்கும், ஆதரவளிப்பதற்கும் ஆதரவாளர்கள் இருப்பார்கள். இது சாதாரணமான விடயம். இதனடிப்படையில் தான் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஹிஸ்புல்லா மஹிந்தவுக்கும், சஹ்ரான் மைத்திரிக்கும் ஆதரவளித்துள்ளனர். இவ்வாறு இவர்கள் இருவரும் வெவ்வேறு தரப்பினருக்கு ஆதரவளித்தமையால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட முறுகல் அவர்களுடைய தனிப்பட்ட விடயமாகும். தெரிவுக்குழுவில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன. இதை புரிந்து கொள்ளாததைப் போன்று ஹிஸ்புல்லாஹ் தொடர்பில்லாத ஒரு விடயத்தைக் கூறியுள்ளார். இது மாத்திரமல்ல அண்மையில் ' இலங்கையில் நாம் சிறுபாண்மையினர் என்றாலும் சர்வதேசத்தில் பெரும்பான்மையினர் ' என்று கூறியிருந்தார். அண்மைக்காலமாக ஹிஸ்புல்லா இவ்வாறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வீண் சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றார். இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.