தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருட்டு.?

breaking
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதனிடையே மோடி தலைமையிலான பாஜக அரசில் மத்திய மந்திரியாகி இருக்கும் ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு சென்றுள்ளார். செய்தியாளர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போது அவருடன் அமர்ந்திருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது செல்போனை அங்கிருந்த டேபிளில் வைத்துள்ளார். செய்தியாளர் சந்திப்புக்குப் பின், மத்திய அமைச்சருக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனை கட்சிக்காரர்கள் சூழந்து கொண்டனர். சால்வையுடன் பொக்கேவையும் கொடுத்துவிட்டு, சில வார்த்தைகள் பேசியுள்ளார். இந்நிகழ்வு முடிந்த பின், டேபிளில் வைத்திருந்த தன் செல்போனை அவர் மீண்டும் எடுக்க நினைத்தபோது,அங்கிருந்த செல்போனைக் காணவில்லை. இதையடுத்து அந்தப் பகுதிகளில் தமிழிசை உள்ளிட்ட கட்சியினர் தேடியும் செல்போனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கூட்டத்தில் யாரேனும் திருடியிருக்கக் கூடும் என்பதால், இதுதொடர்பாகத் தமிழிசை தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருடப்பட்டது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.