ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி பரபரப்பு தகவல்.!

breaking
சென்னை மாதவரத்தில்  நேற்று  அதிகாலை ரவுடி வல்லரசு போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாதவரம் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள மைதானம் பரபரப்பாகவே காணப்பட்டது. ரவடி வல்லரசுவை போலீஸார் என்கவுன்டர் செய்துவிட்டதாக வாக்கிடாக்கி அலறின. சென்னையில் என்கவுன்டர் நடந்து சில ஆண்டுகள் கடந்தநிலையில் இன்று மாதவரத்தில் போலீஸார் துப்பாக்கியைத் தூக்கியதன் பின்னணியில் சில காரணங்கள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வியாசர்பாடியில் தங்கியிருந்த வல்லரசு, தற்போது மாதவரத்தில் குடியிருக்கிறார். இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, அடி தடி, செயின் பறிப்பு என 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வல்லரசு,  பிரபல ரவுடி ஒருவரின் கூட்டாளி.  வல்லரசுவை போலீஸார் தேடிவந்தநிலையில் வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தலைமைக் காவலர் பவுன்ராஜ் மற்றும் காவலர் ரமேஷ் ஆகியோர் வல்லரசு பதுங்கி இருந்த இடத்துக்குச் சென்றனர். அப்போது ரவுடி வல்லரசு, கதிரவன், கார்த்திக் ஆகியோர் அங்கு இருந்தனர். ரவுடி கும்பலுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில்தான் வல்லரசு, காவலர் ரமேஷை வெட்ட முயன்றுள்ளார். அவர் தப்பிவிட அந்தக் கத்தி தலைமைக் காவலர் பவுன்ராஜின் தலையில் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பவுன்ராஜ் சரிந்தார். ஒருகட்டத்தில் தனிப்படை போலீஸாரை மீண்டும் ரவுடி வல்லரசு வெட்ட முயன்றார். அப்போது தற்பாதுகாப்புக்காக இன்ஸ்பெக்டர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு குண்டுகள் வல்லரசுவின் நெஞ்சுப் பகுதியிலும், ஒரு குண்டு இடது கால் தொடைப்பகுதியிலும் துளைத்தன. கீழே விழுந்த ரவுடி வல்லரசுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என்கவுன்டர் குறித்த தகவலை உயரதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.
வல்லரசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த இடத்தை கூடுதல் கமிஷனர் தினகரன் ஆய்வு நடத்தினார். ரவுடி வல்லரசு என்கவுன்டர் சம்பவத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ரவி, வேளச்சேரி வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் சம்பவத்திலும் பங்கேற்றவர். 2012ம் ஆண்டு நடந்த வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் சம்பவத்துக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பின்னர் துப்பாக்கியைக் கையில் எடுத்துள்ளார் இன்ஸ்பெக்டர் ரவி என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.