எம் மொழி காக்க ஆயுதம் ஏந்திய ஆன்மபலம் நீங்கள் அப்பா!

breaking

அப்பா

அப்பா... என் ஆசை அப்பா என் செல்ல அப்பா அப்பா இந்த மூன்றெழுத்து காவியத்தை எப்படி கவி புனைவது! அப்பா இந்த ஓற்றை வார்த்தைக்குள் மொத்தமாய் அடங்கிவிடுகிறது உலகின் பாசங்கள் அத்தனையும்... என் செல்ல அப்பாவைப் பற்றி கவிவரிகளில் சொல்ல தமிழில் வார்த்தைகள் போதவில்லை.. இருந்தும் என் முத்தான அப்பாவை முத்தமிழில் பாட முயற்சிக்கின்றேன்.. அப்பா....... அன்புக்கு கட்டுப்படும் ஆண்மை நீங்கள் ஆசைமுத்தத்தை அள்ளித்தரும் அழகியல் நீங்கள் இனமானம் காத்து நின்ற மாவீரம் நீங்கள் ஈழமண்ணை காதல் செய்த புலிவீரம் நீங்கள் உயிர்மீட்டி தமிழ் காத்த உன்னதம் நீங்கள் ஊரெங்கும் உறவைச் சேர்த்த அன்புள்ளம் நீங்கள் எதிரியின் காப்பரண் அழிக்கும் எரிமலை நீங்கள் ஏதிலித்தமிழனின் மானம் காத்து நின்ற மறத்தமிழ் வீரம் நீங்கள் ஐம்பெரும் காப்பியங்களில் கூட கூறிடாத காவியர் நீங்கள் ஓளிவீசி நல் வழிகாட்டும் என் சூரியர் நீங்கள் ௐதும் வேதமாகி என் நாவில் தவழும் நற்றமிழ் நீங்கள் ஒள காக்க ஒளதாரியமாய் உம்மைக் கொடுத்த ஆற்றல் நீங்கள் ஆய்தம் கொண்ட எம் மொழி காக்க ஆயுதம் ஏந்திய ஆன்மபலம் நீங்கள் உள்ளும் புறமும் வல்லமையாகி வழிகாட்டி நிற்கும் வரலாறு நீங்கள் உள்ளம் எங்கிலும் விடுதலையின் ஓளியாகி வென்றிடும் ஈழமதில் சுடரும் சுடராகி மாவீரத்தின் வழியாகிய என் உயிர்த்தந்தை நீங்கள் விடுதலை ௐன்றே இலக்காய் கொண்டு அல்லும் பகலும் உங்கள் கனவுகள் சுமந்தே நடக்கின்றோம் வெல்லும் வரை வழித்தடமாய் வந்திடுங்கள் அப்பா.......

-இலக்கியா புருசோத்தமன்-