Take a fresh look at your lifestyle.

தொடரும் ஆக்கிரமிப்பும் தேரரின் வாக்குறுதியும்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரையில் பஸ்களில் கொண்டு சென்று இறக்கப்பட்ட சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு, அநுராதபுரம், வெலிஓயா பகுதியிலிருந்து மூன்று பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படையினரின் ஆதரவுடன் பிக்குகளால் கொண்டு சென்று இறக்கப்பட்ட சிங்களவர்கள் இவ்வாறு ஆப்பாட்டத்தில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் மீண்டும் அச்ச நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பதில் அவர்கள் உறுதியுடன் இருப்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கின்றது.

இந்தச் சர்ச்சைக்குரிய ஆலயப் பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்குப் பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்றம் அறிவித்திருந்தது. அனுமதியற்ற முறையில் நடப்பட்ட விகாரை பெயர்ப் பலகை மற்றும் பிள்ளையார் ஆலயப் பெயர்ப் பலகை ஆகியன வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் அகற்றப்பட்டன. இந்த நிலையில் பெயர்ப் பலகை அகற்றப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும், பிள்ளையார் ஆலயச் சூழலுக்கு உரிமை கோரியும் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் வன்முறைகளையும், வெறுப்புணர்வையும் தூண்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதை பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய பிக்குவும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரெலிய ரத்தின தேரர், முக்கியமான ஒரு வாக்குறுதியை தமிழ் மக்களுக்குக் கொடுத்திருந்த நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றமையும் கவனிக்கத்தக்கது. “இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லையாயின் அதற்காக நீதிமன்றம் செல்லத் தேவையில்லை, பொலிஸ் நிலையம் செல்லத் தேவையில்லை” எனக் கூறிய அவர், “தமிழ் மக்கள் விரும்பாத இடங்களில் இருந்து புத்தர் சிலைகளை நாங்களே அகற்றுவோம்” எனவும் வாக்குறுதியளித்தார்.

வடக்கில் திடீரென வைக்கப்படும், புத்தர் சிலைகளும், அதனையடுத்து உருவாகும் விகாரைகளும் அமைதியைச் சீர்குலைத்துவரும் நிலையில் அத்துரெலிய ரத்தின தேரர் இந்த வாக்குறுதியைக் கொடுத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த வாக்குறுதியை அவர் கொடுத்திருந்தாலும், அது ஒரு வெற்று வாக்குறுதிதான் என்பதை நீராவியடியில் ஞாயஜற்றுக்கிழமை இடம்பெற்ற சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டம் உணர்த்தியது.

சர்ச்சைக்குரிய பௌத்த துறவியான அத்துரெலிய ரத்தின தேரர், சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவில் அரசியலை ஆரம்பித்தவர். 2015 இல் மகிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய அவர், ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் எம்.பி.யாக பின்னர் நியமிக்கப்பட்டவர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் அமைச்சர் ஒருவரும், இரண்டு ஆளுநர்களும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கண்டியில் ஆரம்பித்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர், ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம்தான் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பதவிகளைத் துறப்பதற்குக் காரணமாக இருந்தது.

இந்து – பெளத்த கலாசார பேரவையில் 2ஆம் மொழிக் கல்வியை நிறைவு செய்த மாண வர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லலூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருக்கும் அவர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்மூலம் தமிழ் மக்களிடம் காணப்படும் சீற்றத்தைப் புரிந்துகொண்டுள்ள நிலையிலேயே, “தமிழர்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலைகளை வைக்கப்போவதில்லை” என்ற “வெற்று வாக்குறுதியை” அவர் கொடுத்திருக்கின்றார்.

“இந்து சமயத்துக்கும் பெளத்த சமயத்துக்கும் இடை யில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இங்கே இந்து ஆல யங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் அதனை மக்கள் விரும்பாவிட்டால் நாங்கள் செய்யமாட்டோம்” என அவர் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றார். தமிழ் மக்கள் மத்தியில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் சீற்றத்தைத் தணிப்பதற்கு இதன் மூலம் அவர் முற்பட்டிருக்கின்றார் என்பது தெரிகின்றது. உண்மையில் புத்தர் சிலைகளுக்கோ பௌத்த மதத்துக்கோ தமிழர்கள் எதிரானவர்களல்ல. பௌத்த மதக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்பவர்கள் – அதனை மதிப்பவர்கள். தமிழ் பௌத்தர்கள் கூட இருந்திருக்கின்றார்கள் என்கிறது வரலாற்று ஆய்வுகள். இனவாதிகளால் புத்தர் சிலைகள் வைக்கப்படும் நோக்கங்களுக்கே தமிழர்கள் எதிரானவர்கள்.

புத்தர் சிலைகளைக் கண்டு தமிழர்கள் அச்சமடைவதற்குக் காரணம், அவை ஆக்கிரமிப்பின் சின்னங்களாக மாற்றப்பட்டுவிட்டதே. தமிழ்த் தாயகத்தை ஆக்கிரமிக்க சிங்கள இனவாத ஆக்கிரமிப்பாளர்கள் முதலில் புத்தர் சிலைகளை வைக்கின்றார்கள். பின்னர் அந்த இடங்களில் விகாரைகளைக் கட்டுகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி, சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றியமைக்க முற்படுகின்றார்கள். இதன்மூலம் தமது தாயகத்திலேயே தமிழர்கள் சிறுபான்மையினமாகின்றார்கள். காணிகளை இழக்கின்றார்கள். இந்த வரலாறுதான் தமிழ் மக்களை அச்சமடையச் செய்கின்றது. அம்பாறையிலும், திருமலையிலும் இது வெற்றிகரமாகச் செய்யப்பட்டிருக்கின்றது. இப்போது முல்லைத்தீவு இலக்கு வைக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, செம்மலை, நீராவியடியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் இதன் தொடர்ச்சிதான். சிங்கவர்களோ பௌத்தர்களோ வசிக்காத அந்தப் பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகில் திடீரென புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினால், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் என அது அடையாளம் காணப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பௌத்த பிக்கு ஒருவரே சிறிலங்கா இராணுவத்தின் ஆதரவுடன் இதனைச் செய்தார். தொல்பொருள் திணைக்களமும் இதற்கு அனுசரணை வழங்கியது. நீதிமன்ற உத்தரவையும் மீறி இங்கு புதிய கட்டுமானங்களை அமைப்பதற்கான முயற்சிகளை பிக்கு மேற்கொண்டதை யாரும் தடுத்துநிறுத்தவில்லை. பிக்குவையும், புத்தர் சிலையையும் பாதுகாக்க அங்கு இராணுவக் காவலரண் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் காணியைப் பெற்று சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களுடன்தான் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் அடுத்த கட்டமாக அங்குள்ள பிள்ளையார் கோவில் தரைமட்டமாக்கப்படலாம்.

திருமலை கன்னியா வென்னீரூற்றுப் பகுதியில் நடைபெறுவதும், நீராவியடியில் நடைபெறுவதும் ஒரே இலக்கிலான நிகழ்வுகள்தான்.

யாழ்ப்பாணத்தில் வைத்து “தமிழ் மக்கள் விரும்பாத இடங்களில் இருந்து புத்தர் சிலைகளை நாங்களே அகற்றுவோம்” என வாக்குறுதி கொடுத்திருக்கும் அத்துரெலிய ரத்தின தேரர், நீராவியடியிலும், கன்னியாவிலும் அடாத்தாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தயாராகவில்லை. இந்த இரண்டு இடங்களிலும் பதற்ற நிலை உச்சத்திலிருந்த காலகட்டத்தில்தான் அத்துரெலிய தேரர் யாழ்ப்பாணத்திலிருந்தார். மக்களைக் கவர்வதற்காக இவ்வாறு அதனையாவது அவர்கள் சொன்னாலும், அவர்களின் நோக்கமும் அதுதான் என்பதே உண்மை.