"ஏய் மேல கை வெச்சீங்க.. அவ்வளவுதான் "நாம் தமிழர் கட்சியினரை சீண்டியதால் ஆவேசம் (காணொளி இணைப்பு)

breaking
  சென்னை: "தண்ணி இல்லாம அவனவன் சாவறானுங்க.. இதுல ஏன் தண்ணி விட்டேன்னு சண்டையா?" என்று குடிநீர் விநியோகத்துக்கான பிரச்சனை ஒன்று ஆவடியில் வெடித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால், பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து தண்ணீர் கிடைக்க முடிந்த அளவு பொதுமக்களுக்கு உதவி வருகிறார்கள். இப்படித்தான் நாம் தமிழர் கட்சியும் குடிநீர் விநியோகத்தை கையில் எடுத்துள்ளது. ஆவடி, திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரில் குடிக்க சுத்தமாக தண்ணியே இல்லை என்று இந்த கட்சி உறுப்பினர்களுக்கு தெரியவந்தது. அதனால், அந்த பகுதிக்கு இக்கட்சி சார்பாக நேற்று டேங்கர் லாரியில் 25,000 லிட்டர் தண்ணீரை நிரப்பிக்கொண்டு போய் அப்பகுதி பொதுமக்களுக்கு விநியோகித்தனர். அப்போது அந்த பகுதி கவுன்சிலர் அங்கே வந்துவிட்டார்.. "நான்தான் ஏரியா கவுன்சிலர், என்னைக் கேட்காம நீங்கள் எப்படி தண்ணீர் தரலாம், எங்க ஏரியாவில உங்க கட்சியை வளர்க்கப் பார்க்கிறீர்களா?" என்று மிரட்டியுள்ளார். அதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களோ,"நீங்கள், இப்போ ஒன்னும் கவுன்சிலர் இல்லை, முன்னாள் கவுன்சிலர்தான். நாங்க கட்சி பெயர் பொறித்த இந்த சட்டைதான் உங்களுக்கு பிரச்சனைன்னா, இதை கழட்டிட்டுகூட தண்ணீர் தருவோம்" என்று பதில் சொன்னார்கள். https://www.facebook.com/thaarakammedia/videos/2406109272772606/ இது வாக்குவாதமாக ஆரம்பமானது.. உடனே செல்வாக்கை பயன்படுத்தி கவுன்சிலர் திருமுல்லைவாயல் போலீஸாரை வரவழைத்து விட்டதாக சொல்லப்படுகிறது. நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களிடம், "முதல்ல.. இது குடிக்கிற தண்ணிதானா அப்படிங்கறதுக்கு சர்ட்டிபிகேட் வாங்கி இருக்கீங்களா? தண்ணி வண்டிக்கு லைசென்ஸ் இருக்கா? என்று சரமாரியாக கேள்வி கேட்டாராம் அந்த அதிகாரி. அப்போது அந்த பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து, "உதவி செய்தவங்களை ஏன் இப்படி செய்றிங்க.. அவங்க மேல கை வைக்க கூடாது.. லாரியை பறிமுதல் செய்யகூடாது" என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் இப்படி திரண்டு வருவதை பார்த்ததும், "சரி.. இனிமேல் தண்ணீர் விநியோகம் பண்றதா இருந்தால், 3 நாளைக்கு முன்னாடி அனுமதி வாங்கணும்" என்று சொல்லிவிட்டு நகர்ந்துள்ளார் எனினும் கடைசிவரை இருந்து, தண்ணீர் வழங்கிய நாம் தமிழர் கட்சிக்கு பொதுமக்களும், போலீசாரிடம் தங்களை விட்டுக்கொடுக்காமல் பேசிய மக்களுக்கு நாம் தமிழர் கட்சியினரும் மாறி மாறி நன்றி சொல்லி கொண்டனர்.