தமிழர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் இராணுவம்!

breaking

இலங்கைச் சிங்க படைப்பிரிவின் இராணுவத்தினர் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 நிர்வாகப் பகுதிகளிலும் அதிஸ்டலாபச் சீட்டு விற்கும் போர்வையில் தமிழ் மக்களை அச்சுறுத்திப் பணம் பறிப்பதில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக படுவான்கரைப் பகுதியில் இராணுவ முகாமுக்கு அருகில் வீதியால் செல்லும் தமிழ் மக்களை வழிமறித்து இராணுவத்தினர் தம்மிடமுள்ள 100 ரூபா மதிப்பிலான அதிஸ்டலாப சீட்டொன்றைக் கொடுத்து அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைப் பறிப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதாக தமிழ் நெற் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அதிஸ்டலாபச் சீட்டு விற்பனையில் கிடைக்கும் நிதி, சிங்கப் படைப்பிரிவின் இராணுவத்திற்கும் போரில் காயமடைந்து ஊனமுற்ற இராணுவத்திற்கும் அவர்களின் குடும்பங்களிற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த அதிஸ்டலாபச் சீட்டு விற்பனையி்ன் மூலம் வருடாந்த சிங்க மேளா நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் வழங்கிய அதிக அதிகாரங்களை அடுத்து இலங்கை இராணுவத்தினர் அதிஸ்டலாபச் சீட்டை வாங்க விரும்பாதவர்களை மிரட்டி விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தரவை முகாமைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் சீட்டிழுப்பு விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பு சிங்கப் படைப்பிரிவுக்கு வரி செலுத்துவதைப் போல இந்த சம்பவம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

வருடாந்த சிங்க மேளா நிகழ்வை மூன்றாவது தடவையாக இவ்வருடமும் நடத்த சிங்கப் படைப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.