சஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை - வேலிக்கு ஓணான் சாட்சி.?

breaking
சஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறியமை உண்மைக்கு புறம்பானவையென காத்தான்குடி முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “சஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாகவும் பின்னர் அவரை கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் அசாத் சாலி சாட்சியம் வழங்கியிருந்தார். இவை உண்மைக்கு புறம்பான கருத்துக்களாகும். எனது காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை. இது சாதாரண விடயம் அல்ல. இத்தனை வீடுகள் தீ வைக்கப்பட்டது என்றால் அது நாடே அறிந்திருக்கும். என்னுடைய மூன்று வருட சேவை காலம் முடிவடைந்த பின்னர் இடமாற்றம் வழங்கப்பட்டதே அன்றி சஹரானை கைது செய்ய சென்ற போது அவ்வாறு நடக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது அப்துல் ராசிக் தொடர்பில் ஏதேனும் தெரியுமா என சரத் பொன்சேகா கேட்ட பொழுதே முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமைதியாக இருந்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.