லண்டன் வரை எதிரொலித்த சென்னை தண்ணீர் பஞ்சம்.!

breaking
ஒரு வழியாக, சென்னை தண்ணீர் பஞ்சம் தொடர்பான செய்திகள், தேசிய ஊடகங்களில் மட்டும், இல்லாமல் பிரிட்டிஷ் நாளிதழிலும் வெளியாகி உள்ளது. பெரும்பாலான, ஆங்கில தேசிய ஊடகங்கள், டிவி சேனல்களில் தென்னிந்தியா, அதிலும் குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களின், பிரச்சினைகள் தொடர்பான செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்ற முணுமுணுப்புகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தென் இந்தியாவில் பெங்களூர் தவிர்த்த பிற நகரங்களை தேசிய ஊடகங்கள் கவனிப்பதில்லை என்ற பேச்சும் உண்டு.
 
சென்னை, பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது கூட, துவக்கத்தில் தேசிய ஊடகங்களில் அது குறித்த செய்திகள் வராமல் இருந்தன. அப்போது மக்கள் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். தாமதமாகவே, போட்டி போட்டு பிறகு செய்தியை ஒளிபரப்பின ஆங்கில செய்தி சேனல்கள்.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக, தேசிய ஆங்கில சேனல்களில், சென்னை தண்ணீர் பஞ்சம் தொடர்பான செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. இந்தியா டுடே, டைம்ஸ் நவ், நியூஸ் 18, உள்ளிட்ட செய்தி சேனல்களும், அதற்கு முன்பே, மிரர் நவ் போன்ற ஆங்கில ஊடகங்களும் செய்தி ஒளிபரப்பின. இதுவே தாமதம் தான் என்ற போதிலும் கூட, போதிய அளவுக்காண செய்தி ஒளிபரப்பை அவை செய்து வருகின்றன.
 
இது தேசிய அளவில் சென்னை பிரச்சினை தொடர்பாக கவனத்தை ஈர்க்க உதவும். இது ஒரு பக்கம் என்றால், இங்கிலாந்தில் வெளியாகக் கூடிய, 'தி கார்டியன்' என்ற முன்னணி ஆங்கில பத்திரிக்கையின், வெப்சைட்டிலும், சென்னை தண்ணீர் பஞ்சம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. "தண்ணீர் பஞ்சத்தில் சென்னை சிக்கியுள்ளது, நீர் சேமிப்பில் கோட்டை விட்டதாக நிர்வாகிகள் மீது எழுகிறது குற்றச்சாட்டு" என்ற தலைப்பில் அந்த பத்திரிகையின் வெப்சைட்டில் செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரம் சென்னைக்கு, குடிநீர் வழங்கக் கூடிய நான்கு நீர் தேக்கங்களிலும் தண்ணீர் இல்லாததால் சிரமப்படுகிறது. தண்ணீர் பஞ்சத்தில் நகரம் சிக்கியுள்ளதாக அந்த செய்தி மேலும் விவரிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது, சென்னை தென்னிந்தியாவின் மிக முக்கியமான நகரமாக இருந்தது.
 
பல்வேறு நிர்வாக அலுவலகங்கள் இங்கிருந்துதான் செயல்பட்டன. மதராஸ் மாகாணம் என்று ஏறத்தாழ பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்கள், இதன் நிர்வாகத்தின்கீழ் இருந்தன. எனவே சென்னை தொடர்பாக பிரிட்டீஷ், வாசகர்களுக்கு பெரும் புரிதல் இருக்கிறது என்பதை இந்த செய்தி எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.