மதுரை மண்ணில் மீண்டும் உருவாகினால் கண்ணகி .?

breaking
அன்று பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டது போல், மதுரையில் கலெக்டர் முன் குழந்தையை போட்டபடி மனைவி, ‘‘காவலரால் என் கணவர் கொலையானதற்கு தகுந்த பதில் சொல்லுங்கள். நீதி, நியாயம் எங்கே’’ என பொங்கி எழுந்து பேசிய விவகாரம் அம்பலமாகி உள்ளது. மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் விவேகானந்தகுமார் (27). டயர் வியாபாரியான இவர், கடந்த 16ம் தேதி மதுரை செல்லூர் மேம்பாலத்தில் நண்பருடன் டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் மறித்துள்ளனர். விவேகானந்தகுமார் நிற்காமல் சென்றதால், ஒரு போலீஸ்காரர் வீசிய லத்தி டூவீலர் சக்கரத்தில் சிக்கியது. இதில் இருவரும் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரில், விவேகானந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு 2 ஆண்டுக்கு முன் தான் திருமணம் நடந்துள்ளது. கஜப்பிரியா என்ற மனைவி, ஒரு வயது குழந்தை உள்ளது. விவேகானந்தகுமார் பலியான துயர சம்பவத்துக்கு போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல், ‘பாலத்தின் சுவரில் டூவீலர் மோதி விழுந்ததில் பலியாகி விட்டார்’ என்று சர்வசாதாரணமாக விபத்து வழக்குப்பதிவு செய்து விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டனர். ஆனால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலியானவரின் உடல் மதுரை அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு வந்து பரிசோதனை முடிந்தும், உடலை வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்தனர். கணவனை இழந்த கஜப்பிரியா வெகுண்டு பொங்கியெழுந்தார். கணவர் உடல் அரசு மருத்துவமனையில் இருக்கும்போது, மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு தலைவிரி கோலத்துடன் கதறியபடி நீதி கேட்டு வந்தார். கலெக்டரின் அறைக்கு நேற்றுமுன்தினம் சென்ற கஜப்பிரியா, அங்கிருந்த கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரின் மேஜையில் கைக்குழந்தையை படுக்க போட்டார். பின்னர், ‘‘என் வீட்டுக்காரர் என்ன குற்றம் செய்தார்? அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதில் சொல்லுங்கள், என் கணவர் கொலை மூடி மறைக்கப்படுகிறது. நீதி, நியாயம் எங்கே?’’ என்று கண்ணீரும் கம்பலையுமாக கனல் தெறிக்க கேள்வி எழுப்பினார். இதை கேட்டு அதிர்ந்து போன கலெக்டர், நாற்காலியை விட்டு எழுந்து, ‘‘நடந்ததை பதற்றமின்றி சொல்லுங்கள். நீங்கள் சொல்வதும், கோருவதும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்று ஆறுதல் கூறினார். அவருடன் வந்த குடும்பத்தினர் கஜப்பிரியாவையும், தாயின் கதறலை கேட்டு அழுத குழந்தையையும் சாந்தப்படுத்தி கண்ணீர் மல்க வெளியே அழைத்து சென்றனர். இந்த சோக காட்சி கல்நெஞ்சையும் கனிய வைத்தது. கலெக்டரிடம் மனு வழங்கி முற்றுகை, மறியல், போராட்டம் நடத்தியும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கணவர் சாவுக்கு நியாயம் கிடைக்காத நிலையில், கஜப்பிரியா தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டார். கணவர் உடல் மருத்துவமனையில் இருக்கும்போது, தாங்க முடியாத வேதனையில் துடித்த கஜப்பிரியா வீட்டில் தூக்கு போட்டு நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை கணவர் உடல் வைக்கப்பட்டுள்ள, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவர் உடல் இருக்கும் அதே மருத்துவமனையில் அவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுகிறார். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஆட்சிக்காலத்தில் கோவலன் மீது குற்றம் சுமத்தி கொலைக்களத்தில் நிறுத்தி கொல்லப்பட்டதும், கண்ணகி பொங்கியெழுந்து தலைவிரி கோலத்துடன் அரண்மனைக்கு வந்து பாண்டிய மன்னனிடம் ஒற்றை கால் சிலம்பை வீசி நீதி கேட்டதும், தவறை உயர்ந்த பாண்டிய மன்னர் உயிரை மாய்த்துக் கொண்டதும் அன்றைய வரலாறு. அதே மதுரையில் இன்று கஜப்பிரியா, தனது கணவர் சாவுக்கு கலெக்டரிடம் குழந்தையை போட்டு நீதி கேட்டது கல் நெஞ்சையும் கதற வைத்தது.