வைத்தியர் ஷாபி மீது முறைப்பாடளித்த பெண்களிற்கு கொழும்பில் பரிசோதனை

breaking
  வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களில் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் நேற்று வரை 758 பேரின் வாக்கு மூலங்களை விசாரணைகளை முன்னெடுக்கும் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். கருத்தடை விவகாரத்தால் தாம் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடளித்துள்ள பெண்களில் 601 பேர், மகப்பேற்று மற்றும் பிரசவ விஷேட வைத்திய நிபுணர்கள் 7 பேர் உள்ளிட்ட 758 பேரின் வாக்கு மூலங்களே இவ்வாறு பதிவு செய்யப்ப்ட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். காவல்துறைதலைமையகத்தில் நேற்று அவர் நடாத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். இந் நிலையில் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான குழுவினர் இந்த விசாரணைகளுக்கு தேவையான பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி சட்ட விரோத கருத்தடை தொடர்பில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ள பெண்களை கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் கீழ், பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர்கள் இருவர் அடங்கிய சிறப்பு குழு முன்னிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டுள்ளது. குறித்த மருத்துவ பரிசோதனைகள் கொழும்பு காசல் வைத்தியசாலை மற்றும் டி சொய்ஸா பெண்கள் வைத்தியசாலைகளில் முன்னெடுப்பதற்கான அனுமதியை சி.ஐ.டி. பெற்றுக்கொண்டுள்ளது. அதன்படி சி.ஐ.டி. மன்றில் குருணாகல் நீதிவானிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த இரு வைத்தியசாலைகளுக்கும் குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்க தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளில் குறைபாடுகள் இருக்குமாயின் அதனை உடனடியாக நிவர்த்தி செய்துகொடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் செய்யப்பட்ட சிசேரியன் சத்திர சிகிச்சைகள் அவற்றில் பிரதி கூலங்கள் தொடர்பில் பதிவான சத்திர சிகிச்சைகள் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி விரிவான அறிக்கையை சி.ஐ.டி.க்கு கொடுக்கவும் சுகதார அமைச்சின் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை நேற்று வரை வைத்தியர் சாபி விவகாரத்தில் சி.ஐ.டி. பதிவு செய்துள்ள 758 வாக்கு மூலங்களின் விபரங்களும் கேசரிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அதில் சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் வைத்தியருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்த தாய்மார்களில் 601 பேரிடமும், பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர்கள் 7 பேரிடமும், ஷாபி வைத்தியரின் தரத்துக்கு சமனான தரத்தை உடைய குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் ஒருவரிடமும், குழந்தைகள் தொடர்பிலான 6 வைத்தியர்களிடமும், சிசேரியன் வைத்தியர்களுக்கு உதவி வைத்தியர்களாக கடமையாற்றும் 11 வைத்தியர்களிடமும், உணர்விழக்கச் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் 10 வைத்தியர்களிடமும் பதிவு செய்த வாக்கு மூலங்கள் உள்ளடங்குகின்றன. இதனைவிட, சிசேரியன் சிகிச்சைகளின் போது இரு தாதியர்கள் அந் நடவடிக்கையில் பங்கேற்கும் நிலையில், அவ்வாறு அந்த சிகிச்சைகளில் பங்கேற்ற பிரதான தாதி ஒருவர் உள்ளிட்ட 70 தாதியர்களிடமும், 18 உதவியாளர்களிடமும் பாலியல் உறுப்புகள் தொடர்பிலான வைத்தியர் ஒருவரிடமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைவிட குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளரின் வாக்கு மூலத்தையும் சி.ஐ.டி. பதிவு செய்துள்ளது. குருணாகல் வைத்தியசாலை பனிப்பாளரின் வாக்கு மூலத்தை பதிவு செய்ய முன்னர், சி.ஐ.டி. அவருக்கு எதிராக விஷேட நீதிமன்ற உத்தரவொன்றினைப் பெற்றிருந்தது. அதில் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் வைத்தியர் ஷாபி விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் தொகுப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி குருணாகல் நீதிவானுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.