தமிழகத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம் -அதிர்ச்சி தகவல்.!

breaking
தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் நடக்கும் தகவல் பரிமாற்றத்தை கண்காணித்து கோவை இளைஞர்கள் சிலர் வெடிகுண்டு தாக்குதலுக்கு தயாராகி வருவதை உளவுத்துறை கண்டுபிடித்து எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தென் இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் உள்ள இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாத தகவல் பரிமாற்றங்கள் செய்து இருப்பதை மத்திய உளவுத்துறை கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது. தீவிரவாத இயக்கத்தில் அதிக அளவில் புதிய உறுப்பினர் சேர்ந்து இருப்பதும், வெடிகுண்டு தாக்குதல்களை எப்படி நடத்த வேண்டும் என்று அவர்கள் ஆலோசித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும்போது வாகனங்கள், சிறிய ரக ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என்ற பயிற்சியையும் அவர்கள் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் உதவிகளை கோவையில் உள்ள இளைஞர்கள் பெற்றிருப்பதால் அவர்கள் தமிழகத்தில் உள்ள இந்து ஆலயங்கள், மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சுற்றுலா தலங்கள், நட்சத்திர விடுதிகளில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்கள் பட்டியலில் உள்ளவர்களை அதிக அளவில் நெருங்கி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள இளைஞர்களின் நகர்வுகளை வைத்து உடனுக்குடன் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் படகுகளின் வருகைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இதற்கிடையே புழல் சிறைச்சாலையிலுள்ள இஸ்லாமிய பழமைவாதிகளை கடந்த 2 ஆண்டுகளில் சந்தித்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 தக்குதலையடுத்து கோவையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் பிரகாரம் 4 போரை கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டில் திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த தீவிரவாதிகள் ‘அபு அல் கிடல்’ எனும் தீவிரவாத அமைப்பை நடத்தி வருகின்றார்கள் என்றும் அவர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்து இருப்பதையும் உளவுத்துறை உறுதி செய்துள்ளது.