தேரர்களின் கருத்துக்கள் இன மோதலை உருவாக்கும்- சிவில் அமைப்புகள்

breaking

இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கண்டி மகாநாயக்கத் தேரர்கள் வெளியிடும் கருத்துக்களினால், இன மோதல்கள் ஏற்படலாமென சித்திரவதைகளுக்கு எதிரான பொது அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவில் சமுக செயற்பாட்டாளர்களான பாக்கியஜோதி சரவணமுத்து, ஜெனான் பெரரா ஆகியோர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளனர். முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் உணவுகள் அருந்த வேண்டாமென கண்டி அஷ்கிரிய பீடாதிபதி வரக்காகொட சிறி ஞானரத்ன தேரர் விடுத்த வேண்டுகோளுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள ஜெகான் பெரேரா, தமிழ் முஸ்லிம் மக்களையும் தூண்விடும் நடவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார். கண்டி, யட்டிநுவர தியகெலினாவ கித்சிறிமேவன் ரஜமஹா விகாரையில் சென்ற 16 ஆம் திகதி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் வரக்காகொட சிறி ஞானரத்தன தேரர், சிங்கள பௌத்தர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லக் கூடாதெனக் கூறியிருந்தார்.

இது மிகவும் பயங்கரமான இனவாதக் கருத்தென ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். முஸ்லீம்களை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று அஸ்கிரிய பீட மகாநாயக்கர் பேசியிருக்கின்றார்.

இதனையே அடிப்படை மதவாத இஸ்லாமியர்களும் கூறுகின்றனர். அப்படியானால் இரு சமுகங்களுக்கிடையேயும் என்ன வேறுபாடு என்று ஜெகான் பெரேரா கேள்வி எழுப்பினார்.

மகாநாயக்கத் தேரர்களும் அரசியல்வாதிகள் சிலரும் சுய லாபங்களுக்காக பொய்யான கருத்துக்களைக் கூறி இனவாத செயற்பாடுகளைத் தூண்டுவதாக கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

சிங்கள மக்கள் முஸ்லீம்களின் கடைகளுக்குப் போக வேண்டாம் என்று பிரசாரம் செய்யப்படுகின்றது. மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவதற்கான மாத்திரைகளை முஸ்லிம்கள் உணவுகளிலும், பாணங்களிலும் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றன. ஆனால் இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று பாக்கிய ஜோதி சரவணமுத்து தெரிவித்தார்.