ஐ.எஸ் அமைப்பிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நடவடிக்கை.!

breaking
ஈராக் மற்றும் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஐ.எஸ் அமைப்பின் போராளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை விசாரிக்க வேண்டும் அல்லது விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களது குடிமக்களை நாடுகள் பொறுப்பேற்க வேண்டுமெனவும் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் அவர்களை நாடு திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிஷேல் பெச்லெட் வலியுறுத்தியுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் ஐ.எஸ் அமைப்பு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் உட்பட சுமார் 55,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பல நாடுகள் தங்கள் குடிமக்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு தயக்கம் காட்டியுள்ளன. ஐ.எஸ் போராளிகள் மீது வழக்குத் தொடுப்பது கடினம் எனவும் அவர்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பு இருப்பதாகவும் நாடுகள் அஞ்சுகின்றன. பெற்றோருக்கு குடியுரிமை இருந்தபோதிலும் கூட சில நாடுகள் சிரியா மற்றும் ஈராக்கில் பிறந்த ஐ.எஸ் உறுப்பினர்களின் குழந்தைகளை குடிமக்களாக அங்கீகரிக்க மறுத்துவிட்டன. இதன் காரணமாக குழந்தைகளின் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக பெச்லெட் தெரிவித்துள்ளார்.