உயிர்வாழும் ஈகங்கள்….

breaking
இருவிழியில் தமிழீழக் கனவேந்தி நடந்தவர்கள் கருவேங்கையாகும் துணிவோடு நிமிர்ந்தவர்கள் கடினமான தேர்வு யாவும் மகிழ்வுடனே முடித்து காத்திருப்பர் சாகும் தேதிக்காய் நாட்குறித்து கரிகாலன் விழியசைக்கும் திசை நோக்கி வெடியோடு காடு மலை கடலெனினும் இவர் பயணம் தொடர்ந்திடும் பொங்கும் அலை நடுவே கடற்கலங்கள் தகர்த்து உப்புநீரில் உதிர்ந்து போன உத்தமர்கள் பலருண்டு சீறிவரும் சிங்களத்தின் படை நடுவே உட்புகுந்து பகையழித்த நிறைவோடு தரைக்கரும்புலிகளாகிடுவர் வான்வழியில் ஏறி வந்து எம்மினத்தை கொன்றவரை தேடிப்போய் கதை முடித்தார் வான் கரும்புலிகளாகி உயிர் வாழும் வரை வெளியில் தெரியாத அற்புதங்கள் விடிகாலைப் புலர்வோடு வெளியில் வரும் வதனங்கள் வெற்றிச்செய்திகளை மண்ணுக்காய்த் தந்துவிட்டு சிரித்த முகங்களோடு உருவப்படமாகிடுவார் அன்றலர்ந்த மலர்களெல்லாம் மாலைகளாய் கோர்த்து உங்களுக்காய்க் காத்திருப்பர் தேசத்து மக்களெல்லாம் வடியும் கண்ணீரால் விடைகள் தந்திடவே நடுகல் நாயகராய் உறங்கிடுவீர் பணிமுடித்து மண்ணில் புதைந்திருக்கும் வேரின் ஆழம்போல் வெளியில் தெரியாது இவர் உணர்வுகளின் தாகம் போர்மேகம் கருக்கொண்டு எம்மினத்தைச் சூழ்ந்த போது பெருந்தலைவர் உயிர்காக்க தம்முடலில் வெடிபொருத்தி இறுதிக்கணம்வரையும் மாறாக்கொள்கையுடன் தமிழீழமுரைத்து உயிர்க்கொடையீந்தார் கரும்புலிகள் முகமும் முகவரியும் வெளிவரா உயிராயுதங்களாய் பெற்றவர்கள் உற்றவர்கள் தேடலோடு காத்திருக்க இன்னுமின்னும் எத்தனையோ அநாமதேயக்கரும்புலிகள் அறிந்திடாத, அழிந்திடாத வரலாறாய் வாழ்ந்திடுவர் ....…!
விஜிதா ராஜ்குமார்