சாவும் வாழ்வும் விடுதலைக்கானால் தீயும்கூடக் குளிர்கிறது.!

breaking
நெஞ்சினிலே பஞ்சுவைத்து எண்ணையிட்ட நெருப்பு நில்லெனவே சொல்வதற்கு யாருமில்லை எமக்கு சாகவென்று தேதிசொல்லிப் போகும்புயல் கறுப்பு நாளைபகை மீதினிலே கேட்குமெங்கள் சிரிப்பு புதிய திசையொன்றின் புலர்வு தினம். ஆதிக்கக் கதிரைகள் அச்சத்தில் உறையும் நாள். நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த சொல்லியடிக்கும் திருநாள். “கரும்புலிகள்” மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள். தேகத்தில் தீமூட்டும் போதும் சோகத்தின் திரைமூடாத திருமுகங்கள். ஆழத்திற் கிடக்கும் இவரின் அனல்வேர்களை எந்த ஆய்வாளர்களாலும் அளவெடுக்க முடிவதில்லை. அழுதழுது வரும் வார்த்தைகளாற் கூட இவர்களை எழுதிவிட முடியாது. கரும்புலிகளைப் பாடும் போதுதான் கவிஞர்கள் தோற்றுப்போகின்றனர். வெடித்த புயல்களுக்கு எழுதிய கவிதைகளை இருக்கும் கரும்புலிகள் படிக்கும்போதுதான் எழுத்தின் இயலாமை தெரியவருகிறது. தூரிகை எடுத்து ஓவியம் தீட்டலாம் வர்ணங்கள் தோற்றும்போகும் இறுதியில். முலைகொடுத்த தாயர்கள் கூட மலைகளை நிமிர்ந்து பார்க்கலாமே தவிர அவர் உள்ளக்கிடக்கையை உணர்ந்துகொள்ள முடியாது. சாவொன்றின் முன்னேதான் அதிகமானோர் சகலதையும் இழக்கின்றனர். விஞ்ஞானத்தால் சாவுக்குத் தேதிவைக்க முடியுமெனில் அச்சத்தில் அந்தரித்துப் போகும் உலகு. இந்தப்புயல்கள் மட்டும் தேதிவைத்த பின்னர்தான் சந்தோசத்தை தலையில் வைத்துக் கூத்தாடுகின்றனர். நகம் வெட்டும்போது தசை கிள்ளுப்பட்டாலே வேர்த்து விறுவிறுத்துப்போகும் இனத்தில்   இந்த உற்பவங்கள் எப்படி சாத்தியமானது? விதி வழியேதான் சாவுவருமென நம்பும் சமூகத்தில் இந்தப் புதுவிதிகள் பிறப்பெடுத்தது எப்படி? வீதியிற் காணும்போது அமுக்கமாகவும் வீட்டுக்கு வரும்போதில் வெளிச்சமாகவும் குதித்துக்கொள்கின்றன இந்தக் குளிரோடைகள். நாளை இவர்களா வெடிக்கப்போகின்றனர்? நம்ப முடியாமல் இருக்கும் சிலவேளைகளில். சத்திரசிகிச்சை என்றாலே நாங்கள் பாதி செத்துவிடுகிறோம். சாகப்போகும் நேரத்திலும் இவர்களால் எப்படித் தலைவார முடிகிறது? எல்லா உயிர்களையும் இருந்து பார்க்கும் இயமன் இவர்களின் உயிரைமட்டும் எழுந்து பார்ப்பானாம். கரும்புலிகளின் பிறப்பின் சூத்திரம் உயர்மலையொன்றின் உச்சியிலிருக்கிறது. இவர்களின் நதிமூலம் தலைவனின் நம்பிக்கைப் புள்ளியில் ஊற்றெடுக்கிறது. வழி தவறாத பயணியென நம்பியே கரும்புலிகள் கந்தக வெடியாகின்றனர். இவர்கள் வரலாறு திருப்பும் பொழுதுகளில் பூப்பூத்துக்கொள்கின்றன வாசல் மரங்கள். மிதித்துச்சென்ற முட்செடிகள் கூட போய் வருவோருக்குப் புன்னகை எறிகின்றன. பயணம் சொல்லிப்போன காற்தடங்களை பவுத்திரப்படுத்திக் கொள்கிறது காற்று. தரையில் கடலிலும் மறைவிலும் அதிரும்வெடி ஒவ்வொன்றும் காற்றில் கலந்து கரைவதில்லை உளிவரும் திசையில் வரையப்படுகின்றன. அறிந்தழும் தாயரின் குரல்கூட அடித்தலறி ஒப்பாரி வைப்பதில்லை மௌனமாக மாரடித்துக்கொள்கிறது. கரும்புலிகள் எங்கள் காவற்தெய்வமென நாளை வரும் இளைய உருத்தாளர் பூட்டனுக்கும், பெத்தாச்சிக்கும் கோயிலெழுப்புவர். வெடியம்மன் கோயிலென விளக்கேற்றுவர். பேச்சியம்மனும்   பிடாரியம்மனும் இன்றிருப்பதுபோல வெடியம்மன் நாளை விளங்குவாள். வாழ்வின் அர்த்தம் புரியாமல் நாங்கள் வெறும்வெளியில் வழக்காடுகிறோம். எவரையும் நிகழ்காலம் தீர்மானிப்பதில்லை இல்லாத காலத்தில் எதிர்காலமே தீர்மானிக்கிறது. வாழும்போதில் வாழ்வதுமட்டும் வாழ்வல்ல சாவின் பின்னர் வாழ்வதுதான் வாழ்வாகிறது. முன்னோர்கள் இதைத்தான் சொர்க்கமெனச் சொன்னார்கள். கரும்புலிகள் வானத்திலில்லை பூமியிலேயே வாழ்வார்கள். சாவுடன் முடியும் சரித்திரமல்ல இவர்கள் தீயுடன் எரியும் ஜீவன்களல்ல இவர்கள். வரலாற்றில் வாழ்தலென்பது செய்யும் தியாகத்தால் வருவது. சந்தனமாய்க் கரையும் வாழ்விலிருந்து விரிவது. கரும்புலிகளின் வாழ்வு கோடிதவம் பூர்வ புண்ணிய வரம். ஆணென்றும் பெண்ணென்றும் பேதமின்றி இந்த அனற்குஞ்சுகளின் பிறப்புக்கு உலகம் உருகாலம் தலைசாய்க்கும் ஈழத்தமிழருக்கான விடுதலையை எவர் தரமறுத்தாலும் அவரைக் கரும்புலிகளின் கறுப்பு அச்சமூட்டும். கறுப்பே அழகு கறுப்பே வலிமை கறுப்பே வர்ணங்களின் கவிதை கறுப்புத்தான் உலகின் ஆதிநிறம். அதனாற்தான் ஆதிமனிதனான தமிழனும் கறுப்பாய் விளங்குகிறான். கரும்புலிகள் காலமெழுதிகள் எழுதும் காலத்தின் எல்லைக்கற்கள். எல்லையைக் கடந்து எதிரிகள் வராமல் இந்த இடியேறிகள் காவலிருக்கின்றனர். கரும்புலி போகும் திசையினையெந்த மனிதரும் தெரிவதில்லை - அந்தக் கடவுளென்றாலும் இவர்களின் வேரை முழுவதும் அறிவதில்லை அழகிய கனவும் மெழுகிய அழகும் இவரிடம் பூப்பதில்லை - இந்த அதிசய மனிதர் உலவிடும் பூமி பகையிடம் தோற்பதில்லை. கவியாக்கம் : வியாசன்  -விடுதலை புலிகள் இதழ் 136-