பின் வாங்கிய பேரினவாதிகள்: பிள்ளையாருக்கு பொங்கல் ஏற்பாடுகள் பூர்த்தி

breaking
  வடதமிழீழம்: நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு இன்று வெளியிடங்களில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். பேருந்துகளில் இருந்து பெருமளவான பொதுமக்கள் அழைத்து வரப்பட்ட போதும், முல்லைத்தீவு பொலிசார் தலையிட்டதையடுத்து, அவர்கள் தற்போது திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நாளை (6) பெருமெடுப்பில் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட ஆலய நிர்வாகமும், பிரதேச மக்களும் இணைந்து ஏற்பாடு செய்து வருகிறார்கள். பௌத்த பிக்குகளில் அத்துமீறிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக நில உரிமையை மீட்டெடுக்கும் தொடர் முயற்சியின் ஒரு அங்கமாக, இந்த பொங்கல் விழா ஏற்பாடாகியுள்ளதால், தன்னார்வலர்களாக பெருமளவு இளைஞர்கள் இதில் இணைந்துள்ளனர். நாளைய பொங்கல் விழாவிற்கான முன்னேற்பாடுகள் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. ஆலயத்தில் அலங்காரப்பணிகள், மற்றும் பொங்கல் ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஆலயத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் அலங்கரப்பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளைய பொங்கல் விழாவிற்கான உரிய பொலிஸ் அனுமதியும், ஒலிபெருக்கி பயன்படுத்தும் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில், பௌத்த பிக்கு பிரித் ஓதும் நிகழ்வை நடத்தவுள்ளதாக அறிவித்தார். தமிழ் மக்களின் வழிபாட்டை குழப்பும் நோக்கத்துடன் இந்த பிரித் ஓதும் நிகழ்வு நடத்தப்படுவதாக விமர்சனம் எழுந்தது. இன்று காலையில் தென்பகுதிகளிலிருந்து மூன்று பேருந்துகள், சில கார்களில் சிங்கள மக்கள் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். எனினும், முல்லைத்தீவு பொலிசார் துரிதமாக தலையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். ஏற்கனவே தமிழ் மக்களின் பொங்கலிற்கு பொலிசார் அனுமதியளித்துள்ள நிலையில், பௌத்த பிக்குவின் பிரித் ஓதும் நிகழ்வை அனுமதிப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால், அவர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அங்கு வந்த சிங்கள மக்கள் பேருந்துகளில் ஏறி திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.