Take a fresh look at your lifestyle.

கண்டிப் பிரகடனம்

இலங்கைத் தீவு ஒரு பௌத்த நாடு என சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபலசேனா பிரகடனம் செய்துள்ளது. கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அது நடத்திய மகாநாட்டில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியிருப்பதென்ற பெயரில் சிறுபான்மையினங்கள் மீண்டும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தனிச்சிங்கள இராச்சியத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை கண்டியிலிருந்து ஆரம்பிக்கப் போவதாகவும் பொதுபலசேனாவின் செயலாளரான ஞானசார தேரர் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான யுத்த பிரகடனம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார் என்றே கருத வேண்டும்.

பொதுபல சேனாவின் மகாநாடு கண்டியில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10 ஆயிரம் வரையிலான பிக்குமாரை இதற்கு கொண்டுவரப்போவதாக பொதுபலசேனா அறிவித்திருந்தது. இதற்கமைய பெருந்தொகையான பிக்குகளும் சிங்கள இனவாதிகளும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த மாநாட்டையொட்டி கண்டியில் இருக்கக்கூடிய முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கண்டி ஊடாக பயணம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று பொது மக்களும் தமது பயணங்களை தவிர்த்து இருந்தார்கள். அந்தளவுக்கு அச்சம் தரும் வகையில் அந்த மாநாடு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மாநாட்டை தடை செய்ய வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஆறு வருட சிறைத் தண்டனை பெற்றிருந்தவர்தான் ஞானசார தேரர்.  சில வாரங்களுக்கு முன்னர் தான் சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்குள்ள விஷேட அதிகாரங்களைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பின் அடிப்படையில் தேரரை விடுதலை செய்திருந்தார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியிலேயே அவரது விடுதலையும் அமைந்திருந்தது. அரசியலில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மைத்தி தன்னை பலப்படுத்தும் நோக்கத்துடனேயே ஞானசார தேரரை விடுதலை செய்திருந்தார் என்பது பல்வேறு தரப்பினரதும் கருத்து.

ஞானசார தேரர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட ஒருவராக செய்யப்படவில்லை.  விடுதலையான உடனடியாகவே இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இனவாதத்தை அவர் கைகளில் எடுத்துக் கொண்டதை காணக்கூடியதாக இருந்தது. சட்டத்தையும் தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்ட ஒருவராகவே அவர் செயற்பட்டார். முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என மற்றொரு சர்ச்சைக்குரிய கடும் போக்கு பௌத்த துறவியான அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரத போராட்டத்தை கண்டியில் நடத்திக் கொண்டிருந்தபோது அதற்குள் திடீரென்று பிரவேசித்த ஞானசார தேரர் முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்வதற்கான 24 மணி நேர கால அவகாசத்தை விதித்தார். அத்துரலிய ரத்ன தேரர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தில் பலன்களை ஞானசார தேரர் தனது கைகளில் எடுத்துக் கொண்டார். அதேபோலத்தான் கல்முனை விவகாரத்திலும் தலையிட்டு அங்கு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் முடித்து வைத்தார். ஒரு மாத காலத்தில் கல்முனை பிரச்சனைக்கு முடிவு கட்டுவதாக அவர் கூறிய போதிலும் அதற்கான செயற்பாடுகள் எதனையுமே அவர் மேற்கொள்ளவில்லை.

தன்னை தனிப்பெரும் பௌத்த சிங்கள தலைவராக காட்டிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஞானசார தேரர் ஈடுபட்டு இருக்கிறார் என்பதையே கண்டியில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட பிரகடனம் உறுதிப்படுத்தியிருக்கின்றது. இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் சிறுபான்மையினர் அனைவரையுமே இரண்டாம் தரப் பிரஜைகள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான திட்டத்தையே அவர் செயல்படுகிறார் என்பதை அவருடைய கண்டி பிரகடனம் தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. மதவாத அடிப்படையில் செயற்படும் அமைப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார். அவர் குறிப்பிடுவது போல மதவாத அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டுமாயின் முதலில் தடை செய்யப்பட வேண்டியது அவருடைய பொது பல சேனாவாகத்தான் இருக்க முடியும்.

இலங்கை தீவில் சிங்கள பௌத்த இனத்தவர்கள் தவிர தவிர்ந்த ஏனைய அவருக்கும் இடம் இருக்கப்போவதில்லை. அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக தான் நடத்தப்படுவார்கள் என்பதை பொது பல சேனாவின் இந்த பிரகடனம் தெளிவாக சர்வதேச அரங்கிற்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு மேலும் ஒன்றிணைந்த இலங்கைக்குள் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என யாராவது கருதினால் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றபடுபவர்களாக மட்டுமே இருக்க முடியும். பொது பல சேனாவின் பொதுச் செயலாளரின் விடுதலைக்கு மைத்திரி காரணமாக இருந்தார்.

அதேவேளையில் தீவிரமான முறையில் இனவாதத்தை பரப்பும் பிரச்சாரங்களை ஞானசாரர் முன்னெடுக்கும் நிலைமையிலும் அதனை கட்டுப்படுத்துவதற்கான கடிவாளத்தை அரசாங்கம் கைகளில் எடுக்கவில்லை. அவ்வாறு அதனை கட்டுப்படுத்த முற்படுவது சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் நம்முடைய செல்வாக்கை குறைத்து விடும் என்ற அச்சம் சிங்களத் தலைவர்களுக்கு இருக்கின்றது.  இந்த அச்சம் இருக்கும் நிலைமையில் இனநெருக்கடி நியாயமான தீர்வு எதனையும் கண்டு விட முடியாது என்பதே உண்மை. இந்த அச்சமும் இனவாத அமைப்புக்களுக்கு இடம் கொடுக்கும் வகையிலான போக்கும் இலங்கை அரசியலில் தொடர்ந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தப் போக்கை சர்வதேசமும் உணர்ந்து சிறுபான்மையின மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு உரிய செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம். பொதுபலசேனாவின் பிரகடனம் ஒரு யுத்தப் பிரகடனமாகவே அமைந்துள்ளது.