ஆப்கானிஸ்தான் – தலிபான் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது!

breaking
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் கட்டார் நாட்டில் நேரடியாக இடம்பெற்ற 2 நாள் பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதியளித்துள்ளனர். அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல் இடம்பெற்ற தருணத்தில் இருந்து அல்கைடா தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீதும், தீவிரவாதிகள் மீதும் அமெரிக்கா போர் தொடுத்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் 19-வது ஆண்டாக நீடித்து வருகின்றது. அங்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்குள் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக தலீபான் பயங்கரவாத அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. கட்டார் நாட்டின் டோஹா நகரில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 6 நாட்களாக நீடித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கு பெற்றவர்களின் குழு நேற்றும், நேற்று முன்திமும் பேச்சுவார்த்தை நடத்தியது. டோஹா சொகுசு விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 70 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும் இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த கூட்டறிக்கையில் ஆப்கானிஸ்தானில் சமரசத்தை ஏற்படுத்தவும், வன்முறையை குறைத்துக்கொள்ளவும் இரு தரப்பும் உறுதியளித்துக் கொண்டுள்ளன.