பிரான்சில் சிறப்படைந்த வெர்சை பிராங்கோ தமிழ்ச் சங்க 10 ஆவது ஆண்டு விழா.!

breaking
பிரான்சின் பாரிசின் வெளிமாவட்டமும், பிரான்சின் வரலாற்று முக்கியமான இடமாகக் கருதப்படும் வெர்சாய் நகரத்தில் இருக்கும் பிறாங்கோ தமிழ்ச்சங்கம் வெர்சாய் தமிழச்சங்கம் தனது 10 ஆவது ஆண்டினை கடந்த 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தது. சரியாக குறிப்பிட்ட நேரம் 15.00 மணிக்கு விருந்தினர்கள் இனியம் அணியுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வெர்சே மாநகரமுதல்வர் மற்றும் மாநகரசபை முக்கியஸ்தர்கள், வணபிதா, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் மற்றும் தமிழ்ஆர்வலர்கள், ஆசிரியர்கள், சங்க உறுப்பினர்கள் அணியில் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் மாலைகள் அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கினை ஏற்றி வைத்தனர். வெர்சை பிராங்கோ தமிழ்ச் சங்கத்தலைவர் சகாயநாதன் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்துவைக்க நகரபிதா புறோன்சுவா உதவி நகர பிதா madame பிகனோ மற்றும் பங்குத்தந்தை லு லே அவர்களுடன் மாவீரர் மேஜர் சபேசன் அவர்களின் சகோதரி யோகேஸ்வரி, வெர்சை தமிழ்ச்சோலை செயலாளர் கா. பத்திநாதன், தமிழர் ஒருங்கிணைப்பு பரப்புரைப் பொறுப்பாளர் மேத்தா, வெர்சை தமிழ்ச்சோலை பள்ளி நிர்வாகி ஜகுலேந்திரன் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகச் செயலாளர் திரு. காணிக்கைநாதன், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக பொண்டித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.கலைச்செல்வன் மற்றும் ஆகியோர் மங்களவிளக்கினை ஏற்றிவைத்திருந்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் மாணவர்களால் இசைக்கப்பட்டது. தொடர்ந்து வரவேற்புரை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் வரவேற்புரையை செய்திருந்தார். வரவேற்பு நடனத்துடன் பல கலைப்படைப்புக்களை மாணவர்கள் வழங்கினர். காவடி நடனம்,நாடகம்,எழுச்சி பாடல் நடனம், பறைஇசை, பேச்சு, எனப்பல நிகழ்வுகளை மாணவர்கள் வழங்கினார்கள். முதல்வர் மற்றும் வணபிதா போன்றோர் உரைகளையும் ஆற்றியிருந்தார்கள் . அவர்கள் தமிழர் கலை பற்றியும் அதற்கு துணையாகவுள்ள தாய்மொழியையும் அழிந்து போகவிடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்வதும் மிகுந்த பாராட்டுக்குரியது என்பதை தெரிவித்திருந்தனர். திருக்குறள் போட்டியில் மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன. அவர்களுக்கான மதிப்பளித்தலை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக செயலாளர் திரு. காணிக்கைநாதன், தமிழ்ச்சங்கக்கூட்டமைப்பு சார்பாக திரு. கலைச்செல்வன், தமிழ்ச்சோலை முன்னைநாள் தலைவர் திரு. சுரேந்திரன் அவர்களும் வழங்கி மதிப்பளித்திருந்தனர். தமிழ்ச்சோலையின் சிறப்பு நிகழ்வாக அண்மைக் காலமாக் தமிழர்களின் அற்புதக்கலையான பறையை பயின்று பல போட்டிநிகழ்வுகளில் முத்திரை பதித்து வெற்றிகளையும் தமதாக்கிக்கொண்ட பறைஇசையும் நடன நிகழ்வும் நடைபெற்றது. இதனை வழங்கியவர்கள் மிகவும் இளையவர்களாக இருந்தாலும் மயிர்க்கூச்செறியும் வகையில் நடனத்தை வழங்கியிருந்தனர். இவர்களை பறையிசையில் மேன்மேலும் மெருகேற்றும் வகையில் தாய்த்தமிழகத்திலிருந்து பறைஇசைப்பயிற்சியாளரும், இளம் இசையமைப்பாளருமாகிய கலைஞர் திரு. மணிகண்டன் அவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். மேடையில் பறை நடனத்தை வழங்கிய மாணவர்களுக்கு நினைவு பரிசில்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் வழங்கி தனது பாராட்டுதல்களையும் கூறினார். வெர்சே தமிழ்ச்சங்கம் பிரான்சு நாட்டிலே உள்ள முதல்தரத்தில் இருக்கும் தமிழ்ச்சங்கங்களில் ஒன்றாக இன்று வளர்ந்தும் உயர்ந்தும் நிற்கின்றது என்றும், இன்று நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழர்களின் சிறப்பு முழக்கத்தை கொடுக்கும் பறைஇசையை ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களால் ஒலிக்கச்செய்துவரும் முதன்மை இடத்தில் வெர்சே தமிழ்ச்சங்கமும் மாணவர்களும் தான் இருந்து வருகின்றார்கள் என்றும் தமிழர்கள் எங்கள் மானத்தையும், உரிமையையும், வீரத்தையும், புகழையும் உலகத்திற்கு அன்றும், இன்றும் நிலைநாட்டிய புலிப்பிள்ளைகளின் வழித்தோன்றல்கள் இவர்கள் என்றும் இவர்களின் இந்த பறைஒலி எட்டுத்திசையெங்கும் தமிழனின் புகழை ஒலிக்கச்செய்ய வேண்டும் இதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை உறவுகளையும் வாழ்த்தி வணங்குவதோடு சிறப்பாக இதில் அதிக அக்கறையும்,ஈடுபடும் ஊக்கமும் அளித்து வரும் தலைவர் திரு. சகாயநாதன் அவர்களையும் பாராட்டியதோடு இந்த பறையிசைக்கலைஞர்களை மதிப்பளிப்புச் செய்யும் பாக்கியம் தன்வாழ்வில் கிடைத்திருக்கும் பெரும்பேறு என்றும் குறிப்பிட்டிருந்தார். பறையிசைக்கலைஞர் திரு. மணிகண்டன் அவர்களும் சங்கத் தலைவரால் மாணவர்கள் பெற்றோர்கள் கரவொலியுடன் மதிப்பளிப்புச்செய்யப்பட்டார். அவரும் தனது உரையில் தானும் இசையில் நாட்டம் கொண்டு பழகியபோது இதனால் உனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகுது என்று தனது பெற்றோர்கள் தன்னைக்கடிந்து கொண்டதையும் இன்று அதன் புகழ் எவ்வளவு தூரம் புகழை தனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றது என்றும் இந்த மதிப்பு தனது பெற்றோருக்கே சேரும் என்றும் கூறியிருந்தார் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு 10 ஆவது அகவை நிறைவுமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதனை சங்கத் தலைவர் சகாயநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க திரு. சுரேந்திரன் அவர்களும், அவரின் பாரியாரும் பெற்றிருந்தனர். இவர்களுடன் நேர்வே நாட்டில் இருந்து வந்திருந்த தமிழ்உணர்வாளர் உள்ளிட்ட மூத்தவர்களும் பெற்றிருந்தார்கள். பிரான்சில் அண்மைக்காலமாக காலத்திற்கு முந்திய வெப்பநிலையிலும் குழந்தைகள் பெரியவர்கள், பிரெஞ்சு மக்கள் இறுதிவரையும் ஆண்டு நிகழ்வை கண்டு களித்தனர். இச்சங்கமானது தனியே கலையை, விளையாட்டு, தாய்மொழிக்கலை வளர்ப்பதோடு நின்றுவிடாது தனது தாய்மண்ணையும் அங்கு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களையும் நேசித்து அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளையும் செய்துவருகின்றனர். அதற்கு உதவும் வகையில் நல்வாய்ப்புச்சீட்டினையும் வர்த்தகர்களின் உதவியுடன் தரம்மிக்க பரிசில்களுடன் நடாத்தியிருந்தார்கள் என்பதும் இங்கே பாராட்டப்படவேண்டியதாகும். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.