சிரியாவில் நில கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் பலி.!

breaking
சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 9வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது.  இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரும் அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், சிரிய நாட்டில் டெய்ர் அல் ஜாவ்ர் நகரில் தப்லான் பகுதியில் நில கண்ணிவெடிகள் ஐ.எஸ். அமைப்பினரால் புதைக்கப்பட்டு உள்ளன.  அவர்களை விரட்டிவிட்டு அப்பகுதியை அரசு கைப்பற்றியது.  இதன்பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அவற்றை நீக்கும் பணியில் அரசு தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர்கள் விட்டு சென்ற இவற்றில் ஒன்று திடீரென வெடித்துள்ளது.  இதில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.  கடந்த ஏப்ரல் 11ந்தேதி, சிரியாவின் தெற்கே நில கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 3 குழந்தைகள் பலியாகினர்.  மற்றொரு குழந்தை காயமடைந்தது.
இதேபோன்று சிரியாவின் வடக்கே அலெப்போ நகரில் கடந்த மார்ச் 6ந்தேதி நில கண்ணிவெடி ஒன்று வெடித்து 7 பேர் கொல்லப்பட்டனர்.  அதே அலெப்போ நகரில் மார்ச் இறுதியில் மற்றொரு கண்ணிவெடி தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.  கடந்த பிப்ரவரி 24ந்தேதி சிரியாவின் மத்திய பகுதியில் இதேபோன்று நடந்த மற்றொரு கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்களில் மொத்தம் 24 பேர் கொல்லப்பட்டனர்.