மலேசியாவுக்கு ரோஹிங்கியா அகதிகளை கடத்தி செல்லும் மனித கடத்தல்காரர்கள் கைது .!

breaking
ரோஹிங்கியா அகதிகளை  மலேசியாவுக்குள் கடத்தி வந்து போலியான ஐ.நா. அகதிகள் ஆணைய அடையாள அட்டைகளை வழங்கி வந்த கும்பல் ஒன்று மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. பெனாங் மாநிலத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த தேடுதல் வேட்டையின் போது 5 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் இரு மனித கடத்தல்காரர்களும், ஒரு ஏஜெண்ட்டும் சிக்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெனாங் மாநில காவல்துறை தலைவர் நரேனசாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெனாங் மாநிலத்துக்குள் ரோஹிங்கியாக்களை கடத்தி வரும் வேலையில் மூன்று ரோஹிங்கியாக்கள் ஈடுபட்டதாக நம்புகிறோம். விசாரணையின் போது, இவர்களில் ஒருவர் போலியான அகதிகள் ஆணைய அடையாள அட்டையை தயாரிக்கும் ஏஜெண்டாக செயல்பட்டதும் தெரிய வந்தது,” என தெரிவித்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்டு கடத்தி வரப்பட்ட ரோஹிங்கியாக்களுக்கு குறிப்பிட்ட கட்டணத்துடன் வேலை செய்வதற்கான இடங்களை மனித கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்து வந்ததாக காவல்துறை குறிப்பிடுகின்றது. மனித கடத்தலில் ஈடுபட்ட 3 ரோஹிங்கியாக்கள் பாதுகாப்பு குற்றங்களுக்கான சட்டத்தின் அடிப்படையிலும் கடத்தி வரப்பட்ட 2 ரோஹிங்கியாக்கள் குடியேற்ற சட்டத்தின் அடிப்படையிலும் விசாரிக்கப்படுவார்கள் என காவல்துறை தலைவர் நரேனசாகரன் கூறியுள்ளார். ஐ.நா. ஆவணங்களின் படி, மலேசியாவில் போர் மற்றும் வன்முறை காரணமாக இடம்பெயர்ந்த மியான்மர், பாகிஸ்தான், இலங்கை, சோமாலியா, சிரியா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150,024 பதிவு செய்யப்பட்ட அகதிகள் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களில் ரோஹிங்கியா அகதிகள் மட்டும் சுமார் 1 லட்சத்து 33 பேர் இருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.