தற்கொலை தாக்குதலால் அதிர்ந்த சோமாலியா.!

breaking
சோமாலியா நாட்டில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தெற்கு சோமாலியாவில் ஒரு ஓட்டலில் நுழைந்த தீவிரவாதிகள் சுமார் 14 மணி நேர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு சோமாலியாவின் அல்-ஷபாப் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். அல்-ஷபாப் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அல்-கொய்தாவுடன் கூட்டணி வைத்திருப்பவர்கள் ஆவர். அந்நாட்டின் தெற்கு துறைமுக நகரமான கிஸ்மாயோவில் உள்ள அசேசி என்ற நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே, தற்கொலை கார் குண்டு வெடிப்புடன் தீவிரவாதிகள் அட்டூழியம் துவங்கியுள்ளது. கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து குறிப்பிட்ட ஓட்டலை முற்றுகையிட்ட தீவிரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட துவங்கினர். பின்னர் ஒரு கட்டத்தில் நட்சத்திர ஓட்டல் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சோமாலிய பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நிகழ்ந்த மோதலானது, சுமார் 14 மணி நேரம் வரை நீடித்தது. இறுதியில் ஒருவழியாக அனைத்து தீவிரவாதிகளையும் சுட்டு கொன்று விட்டு, நட்சத்திர ஓட்டலை தங்கள் வசம் கொண்டு வந்தனர் பாதுகாப்பு படையினர்.   இந்த மோதல் குறித்து தகவல் தெரிவித்துள்ள சோமாலிய அதிகாரிகள், நட்சத்திர ஓட்டலில் இருந்த அனைத்து தீவிரவாதிகளையும் சுட்டு கொன்று விட்டதாக அறிவித்தனர். எனினும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டனர். இதில் 3 கென்யர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டனை சேர்ந்த தலா ஒருவர், தான்சானியாவை சேர்ந்த மூவரும் அடக்கம். இது தவிர கனடா பத்திரிகையாளர் ஹோடன் நலாயே மற்றும் அவரது கணவர் ஃபரித் ஜமா சுலைமான் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். 2 சீனர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.