காங்கேசன்துறை புலி பாய்ந்த கடல்.!

breaking
நரேஸ், தேசியத்தலைவரை பிரமிக்கச்செய்த அவரது தலைசிறந்த படைவீரர்களுள் ஒருவன். புலிகளின் ஆற்றல் மிகு கடற் போர்த் தளபதி. கிளாலிக் கடற்சமர் அரங்கில் மாவீரன் சாள்ஸ் களப்பலியாகிய பின்னரே, கடற்புல்களின் தாக்குதற் படைத் தளபதியாக பொறுப்பேற்ற போதிலும். கடற்புலிகளின் சரித்திரத்தில் மிகப்பெரும் பகுதியோடு, நரேஸ் பின்னிப் பிணைந்தவனாகவே உள்ளான். “கடற்புலிகளின் சிறப்புத்தளபதி போல இயங்கியவன் அவன்தான்” என்கிறார் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி. லெப். கேணல் நரேஸ் சிவராஜரசிங்கம் நவராஜன் திருகோணமலை.   கண்களில் நீர்வழிய நீர்வழிய நாங்கள் மண் அள்ளித் தூவி விதை குழியலிட்ட அந்தத் தோழன். ஐந்தாண்டுகளுக்கு முன்பு “ஈரோஸ்” அமைப்பு புலிகளோடு சங்கமித்த போது கடற்புலியாகியவன். அதன் பிறகு அவனில்லாமல் கடலில் புலிகள் பாய்ததாகச் சரித்திரமே இல்லை. அவனுடைய கதை ஒரு நீண்ட காவியம். அது முழுமையாக எழுதுகிறபோது உலகப் புகழ் பூத்த புலிகள் இயக்கத்தின் கடற்போர் வரலாறாய் விரியும்…. காங்கேசன்துறைப் “புலிப் பாய்ச்சல்” வரையும்.   “எட்டாண்டுகளுக்கு முந்திய வடமராட்சித் தாக்குதலை விடவும் உயர்ந்த இராணுவ பரிமாணத்தைக் கொண்டது” என வர்ணிக்கப்பட்ட “முன்னோக்கிப் பாய்தல்” விடுதலைப் போராட்டத்தின் அத்திவாரத்திற்கு வைக்கப்பட்ட குறி. “மைய யாழ்ப்பாணமே, பாய்ந்து முன்னேறுவதன் இலக்கு” என்று, படைத் தளபதிகள் பறைசாற்றிக் கொண்டார்கள்… பல அரசசியல் மேலாண்மைகளை எய்தும் சந்திரிக்கா அரசுத் தலைமையின் உள் நோக்கத்திற்காக நகர்த்தப்பட்ட படையெடுப்பு மூன்று நாட்களில் முன்னூறு மக்களைப் படுகொளைசெய்த்து முன்னேறி வந்தது. “திறமையின்மையாலும், பலவீனத்தாலும் சிங்கள தேச வீரர்களின் போராற்றலுக்கு எதிர் நிற்க முடியாமல், புலிப் பயங்கரவாதிகள் யாழ்ப்பாணத்தை விட்டுத் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று சிங்களத் தளபதிகள் கொழும்பில் மார்தட்டிக் கொண்டார்கள். ‘முன்னோக்கிப் பாய்தல்’ புலிகள் இயக்கத்தின் போரியல் வல்லமைக்கு விடப்படும் பெரும் சவாலாகவும் பரிமாணம் பெற்றது. பகைவனுக்குப் படுதோல்வியைப் பரிசளிக்க, தலைவர் முடிவெடுத்தார். தரையிலும் வானிலும் கடலிலும், முப்படைகளுக்கும் அதனைப் பகிர்ந்தளிக்கவும் எண்ணினார். அவரது எண்ணங்கள் பகைவனின் மடியில் நிதர்சனமாகின. ‘முன்னோக்கிப் பாய்தல்’ மீது நிகழ்ந்தது ‘புலிப் பாய்ச்சல்’! படை எடுப்பின் ஒவ்வொரு அங்கத்திலும் விழுந்தது அடி. நிலவழியாக நகர்ந்த தரைப்படையை எதிர்த்து முறியடிக்கும் சம நேரத்தில், வான் வழியால் துணை சேர்க்கும் விமானப்படையின் முதுகெலும்பை உடைக்கும் அதேவேளையில், படையெடுப்பின் உயிர் நாடியென இயங்கிய கடல் வழி விநியோகத்திற்கும் அடி கொடுக்க வேண்டிய தேவையும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. அது ஒரு உடனடி ஏற்பாடு. குறுகிய காலத் தயார்ப்படுத்தல். ‘முன்னோக்கிப் பாய்தல்’ சமர்முனைக்குப் புதிய துருப்புக்கள் அனுப்பப்பட்டு, சிங்களப் படையணிகளுக்கு புத்தூக்கம் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், படையெடுப்பு முனைக்கு இடையறாது மேற்கொள்ளப்பட்ட படைக் கல வழங்கலை நிறுத்துவதற்கும் மட்டுமன்றி குடாநாட்டை முற்றுகையிட்ட பேரபாயத்தை உடைத்தெறியவும், மக்களைப் பிடித்த பய பீதியைத் தகர்த்து எறியவும் என திடீரென ஒழுங்கமைக்கபட்ட ‘புலிப்பாய்ச்சல்’ தாக்குதல் திட்டத்தின் ஒரு அங்கமாகவும் நிகழ்த்தப்பட்ட முன்னேற்பாடுகள் செய்யப்படாத அதிரடி. காங்கேசன்துறை கடற்படைத் தளம் வடபிராந்தியத்தில், சிங்களக் கடற்படையின் நிர்வாகச் செயலகமான காரைநகருக்கு அடுத்தபடியான ஒரு தளமாகவே இருப்பினும் கூட வடக்குப் போர் அரங்கின் தனி ஒரு வழங்கற் பாதையான கடல்வழி மூலம், முப்படையினருக்குமான விநியோகத்தை மேற்கொள்ளும் பிரதான இறங்குதுறை என்றவகையில், அது கேந்திர முக்கியத்துவம் பெற்று தனித்துவமானது. மிக மிகப் பலத்த பாதுகாப்புக்கு உட்பட்ட அந்தப் படைத்தளத்தின் கடற் பரப்பிற்குள் ஊடுருவித் தாக்குதலை நிகழ்த்துவது என்பது, ஒரு சுலபமான காரியமல்ல என்பதும் எமக்குத் தெரிந்திருந்த போதும்…… யாழ். குடாநாட்டிற்குள் உருவாகியிருந்த நெருக்கடியான இராணுவச் சூழல் காரணமாக, காங்கேசன்துறைத் தளம் மீதான ‘புலிப் பாய்ச்சல்’ தவிர்க்க முடியாததாகியிருந்தது. இழப்பைக் கொடுத்தல், படையெடுப்பிற்குத் தடங்களை ஏற்படுத்தல், எதிரிகளைத் திகைப்பிற்குள் ஆழ்த்துதல் போன்ற போர்த் தந்திரோபாய ரீதியான நோக்கங்களிற்காக மட்டுமன்றி, எம் நீண்டகால குறியான ஒரு கட்டளைக் கப்பலை மூழ்கடிக்கும் இராணுவ இலக்கை எய்வதற்காகவும் தான் தாக்குதல் மையமாக, காங்கேசன்துறையே தேர்ந்தெடுக்கப்பட்டது. மின்காந்த அலை அதிர்வியக்கம் மூலம் தள்ளிளையிளிருந்து வானூர்திகள், கலலூர்திகள் முதலியவற்றின் நிலைகளைக் கண்டறியும் ஆற்றல்மிகு ‘தொலைநிலை இயக்க மானிகள்’ பொருத்தப்பட்ட ‘எடித்தார’, ‘அபிதா’, ‘விக்கிரம’ ஆகிய பெயர்களைக் கொண்ட மூன்று பாரிய கப்பல்கள் மேற்கு, வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களான சிங்களக் கடற்படையின் கட்டளைப் பீடங்களாகச் செயற்பற்படுகிறன. புலிகளுக்கு எதிரான கடற் சண்டைகளில் ஈடுபடும் போர்ப்படகுகளின் மூளையாகச் செயற்பட்டு, அவற்றை வழிநடாத்தும் கட்டளைப் பணியை, இந்தத் தாய்க் கப்பல்களே ஆற்றுகின்றன. அந்த வகையில் ஒரு கட்டளைக் கப்பலை மூழ்கடிப்பதானது ஒரு இமாலய சாதனையும், இராணுவ ரீதியான ஒரு பேரு வெற்றியுமாகும். 1990ம் ஆண்டு யூலை 10ம் நாள் காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலி வீரர்கள் தாக்க முனைந்ததிலிருந்து, 1991ம் ஆண்டு ஏப்ரல் 5ம் நாள் சிதம்பரம், ஜெயந்தன் ஆகிய கடற்கரும்புலி வீரர்கள் தாக்கியது ஊடாக, 1994ம் ஆண்டு ஆவணி 16ம் நாள் காங்கேசன்துறையில் அங்கையற்கண்ணி ஊடுருவித் தாக்கியதுவரை, எங்கள் போராட்டத்தின் சரித்திரத்தில், பொன் எழுத்துக்களால் பொறித்து வைக்கப்படவேண்டிய ஒரு வரலாற்றுச் சாதனையாகும். ‘நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள்’, ‘சுலோஜன் நீரடித் தாக்குதற் கரும்புலிகள்’, ‘சாள்ஸ் சிறப்புக் கடற்படையணி’, ;நளாயினி சிறப்புக் கடற்படையணி’ ஆகிய கடற்புலிகளின் நான்கு தாக்குதற் பிரிவுகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. கடற்புலிகளின் உயர் தளபதிகளினது நெறிப்படுத்தலின் கீழ், லெப்.கேணல் மாதவி, தாக்குதலில் பங்கேற்ற பெண்கள் படைப்பிரிவுகளை வழி நாடாத்தினார். லெப்.கேணல் நரேஸ், களமுனைக் கொமாண்டராக முழுத்தாக்குதலையும் வழிநடாத்தினார். மாதவி. கடற்புலிகள் மகளிர் படையணியை நளாயினி விட்டுப் போன இடத்திலிருந்து தொட்டு வளர்த்தெடுத்த அதன் சிறப்புத்தளபதி.‘அங்கயற்கண்ணி நீரடித் தாக்குதல் பிரிவு’, ‘நளாயினி சிறப்புக் கடற்படையணி’, ‘மங்கை படகுக் கட்டுமானப் பிரிவு’ என, கடற்புலிகளின் அணி கிளை பரப்பியது அவளுடைய காலத்தில் தான். விடுதலைப் புலிகளின் கடற்படைக்காக, அவளது வழிபடுத்தலின் கீழ், ‘மங்கை படகுக் கட்டுமானப் பிரிவு, வடிவமைத்த 40 அடிக்கு மேலான நீளம் கொண்ட ஒரு புதிய வகைச் சண்டைப் படகு, ஒரு அருமையான உருவாக்கம். நேரடியாகப் பரீட்சித்துப் பார்த்து தலைவர் அவர்கள் பாராட்டியது, வெறுமனே பண்புக்காக அல்ல; கடற்சண்டைகளில் அவை சிறந்த பயன்பாட்டைத் தரும் என்ற நம்பிக்கையிலும் தான். தனது ஓய்வற்ற உழைப்பின் பயனாக கடற் பெண்புலிகளை, தனித்துச் சண்டையிடும் இன்னொரு வளர்ச்சிக் கட்டத்திற்கு பரிணமிக்கச் செய்த பெருமைக்குரியவள். ஆண்கள் துணையின்றி தனித்த படகுகளில், தனித்த பிரிவாக, கடற் சண்டைகளிலும் பெண்கள் ஈடுபடுகின்ற இன்றைய காலம் மாதவி தோற்றுவித்தது தான். மண்டைதீவில் அப்படித்தான். காங்கேசன்துறையிலும் அப்படித்தான். யூலைத் திங்கள் 16ம் நாள் அதிகாலை 1.00 மணி, துறைமுகத்தின் உள்ளே ‘எடித்தாரா’ கட்டளைக் கப்பலோடு, 3 தரையிறங்கு கலங்கள், மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இறக்கிக் கொன்டிருந்தன. துறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன. ‘டோறா’ அதிவேகத் தாக்குதற் படகுகள் எட்டு; ‘சங்கே’ பீரங்கிப் படகுகள் மூன்று. இரும்புக் காவல். அலைமடியில் தவழ்ந்து அமைதியாக நெருங்கின புலிகளின் படகுகள். ‘சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின்’ வீரர்களான நீயூட்டனும், தங்கனும் வெடிகுன்டுகளோடு ‘எடித்தாரா’வை அன்மித்தார்கள். ஆரம்பித்தது உக்கிரமான சண்டை. காங்கேசன் கடற்பரப்பு போர்க்களமாய் மாறியது.   எம் போராட்ட வரலாறு தன்னில் பதித்துக்கொண்ட மிகப்பெரும் கடற்சமர். ‘எடித்தாரா’ வின் அடித்தளத்தை, வெடிகுண்டுகளோடு அணைத்து கரும்புலிகள் சிதறடித்தார்கள். அது நான்கு வரிகளில் எழுதிவிடும் சம்பவம் அல்ல; நாற்பதாண்டு காலச் சரித்திரத்தை மாற்ற அவர்கள் புரிந்த அரும்பெரும் செயல்! இராப்பகலாய் பட்ட கஸ்ரங்களின் பெறுபேறு; வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளப்பரிய உயிர்த்தியாகம். பெண் கரும்புலிகளின் ஒரு வெடிகுண்டுப் படகு, தரையிறக்கும் கலம் ஒன்றை நெருங்கியது. அசுர வேகம். மிக அண்மைய…! போர்க்கலங்கள் அபூர்வமானவை. அவற்றின் பொதுவான இயல்பு என்னவெனில், நினைத்துப் போவது நிகழாமல் போகும்; நிகழ்ந்துவிடுவது நினையாததாய் இருக்கும். வெடிகுண்டுப் படகு சன்னங்கள் பாய்ந்து செதப்பட்டுவிட தரையிரங்குகலம் தாக்கப்படவில்லை. ஐந்துமணி நேரச் சரித்திரச் சமர் முடிந்து விடியும்பொழுதில் எங்கள் தாக்குதலணிகள் களத்தைவிட்டு வெளியேறின. நரேஸ் உயிரோடு வரவில்லை… மாதவியின் உடல்கூட வரவில்லை.. நியூட்டன், தங்கன், தமிழினி வரவில்லை. தோளோடு தோள் நின்று களமாடிய பதினோரு தோழர்கள் வரவில்லை. பூநகரிச் சமரின்போது நாகதேவன்துறையில் கைப்பற்றிய விசைப்படகு ஒன்றும் மூழ்கிப்போனதால் திரும்பி வரவில்லை…..! வெளியீடு: விடுதலை புலிகள்  இதழ்   மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”