நள்ளிரவில் துடிக்க துடிக்க .... சாதி ஆணவத்தின் கோரத் தாண்டவம்!

breaking

ஜூலை 4-ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் நடந்து முடிந்திருந்தது அந்த இரட்டைப் படுகொலை. பல கனவுகளுடன் திருமணம் செய்துகொண்ட இரண்டே மாதத்தில் உயிரைப் பறிகொடுத்திருந்தது அந்தப் புதுமணத் தம்பதி.

முகம், கழுத்து, முதுகு, தோள்பட்டை, மணிக்கட்டு என மிகக்கொடூரமாக வெட்டப்பட்டதில், படுத்த படுக்கையிலேயே ரத்தவெள்ளத்தில் பிணமாகி இருந்தனர் இருவரும். அதிகாலை உறக்கம் கழிந்து வந்து பார்த்த முத்துமாரிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மகனும், மருமகளும் சதைப் பிண்டமாகக் கிடப்பதைக் கண்டு ஓலமெடுத்து அவர் அலறியதில்தான், ஊர்முழுக்க இந்தக் கொடூரச் செய்தி பரவியது.

"உடலில் விழுந்த ஒவ்வொன்றும் மிக ஆழமான வெட்டுகள். கத்தாமல் இருப்பதற்காகவே கழுத்திலும், குரல்வளையிலும் குறிவைத்து வெட்டியதில், சத்தமில்லாமல் அடங்கி இருக்கிறது மூச்சு'’என்று சடலத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர் பேசிக் கொண்டார்கள். இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின்னாலும் சாதி, வர்க்க ஆணவமே கோரத்தாண்டவம் ஆடியிருப்பதாக நமக்குத் தகவல் கிடைக்க, அந்தப் பகுதியில் விசாரித்தோம்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியிலுள்ள பெரியார் நகர் காலனியில்தான் இந்த பயங்கரம் நடந்தேறியது. அங்கு வசிப்பவர் முத்துமாரி, கொல்லப்பட்ட சோலைராஜின் தாயார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சோலைராஜ், குடும்பச்சூழலால் அருகிலுள்ள கல்லூரியிலிருக்கும் உப்பளத்தில் கூலி வேலைக்குப் போனார். அங்கு வேலைக்கு வந்த குளத்தூர் பக்கமுள்ள பல்லாகுளத்தைச் சேர்ந்த அழகரின் மகள் ஜோதியோடு, சோலைராஜுக்கு காதல் மலர்ந்தது. இவர்கள் இருவருமே தாழ்த்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், உட்பிரிவுகள் வெவ்வேறானவை. இருந்தும் நம்பிக்கையோடு காதலை வளர்த்தவர்களுக்கு திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழவேண்டுமென்பது கனவாக இருந்தது.

சோலைராஜ் கூலித்தொழிலாளி. வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர் ஜோதி. அவரது தந்தை அழகருக்கு சுயமாக வாழ்கிற லெவலுக்கு விவசாய நிலமும், வெளிநாட்டு வேலையும் இருந்தது. மூன்று மகள்கள், ஒரு மகன். ஜோதிதான் மூத்த மகள். மூன்று மாதங்களுக்கு முன்புதான் சோலைராஜ் உடனான ஜோதியின் காதலை அறிந்து அதிர்ச்சியடைந்த அழகர், கடுமையாக எதிர்த்திருக்கிறார். இதில் அவரது உறவுகளும் ஒட்டிக்கொள்ள, எதிர்ப்புகளை மீறி மாலை மாற்றிக் கொண்டனர்.

இருவரும் சோலைராஜின் வீட்டிலேயே குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே தன் இரண்டு மகள்களின் சடங்கு நிகழ்ச்சிக்காக பத்திரிகை அடித்து ஊர்முழுக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார் அழகர். இந்நிலையில்தான், "சாதி மாறி அதுவும் கூலிக்காரனோடு ஓடிப்போனவளின் வீட்டில் யார் பெண் எடுப்பார்கள்' என்ற பேச்சு அழகரின் மனதைப் பிசைந்தது. இனி விழாவிற்கு வந்தாலும் சொந்த பந்தங்களின் வாயிலிருந்து இதே பேச்சு வருமே என்று எண்ணியவர், பத்திரிகை கொடுத்து முடித்த கையோடு, சடங்கு நிகழ்ச்சியை நிறுத்தினார். விடாமல் தூபம் போட்டார்கள் உற்றார் உறவினர். கூலிக்காரனோடு ஓடிப்போன ஓடுகாலியை விட்டுவைக்கணுமா? என்ற தொடர் கேள்விகள் அழகரின் மூளைக்குள் ஆணவ வெறியைத் தூண்டின. இந்தச் சூழலில்தான் காலனியில் இருக்கும் சோலைராஜையும், ஜோதியையும் வேவு பார்த்து, வெயிலின் தாக்கத்தால் வீட்டுவாசலில் உறங்குவதை அறிந்துகொண்டு இரவோடு இரவாக காரியத்தை முடித்திருக்கிறார்கள்.

குற்றவாளிகளைக் கைதுசெய்யாத வரை உடல்களை வாங்கமாட்டோம் என்று போராட்டம் நடந்து கொண்டிருக்க, “""அந்தப் பொண்ணு வீட்ல எதிர்ப்பு. எது வேணாலும் நடக்கலாம்ன்னு சொல்லித்தான், உசுருக்குப் பாதுகாப்பு இல்லைன்னு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். அவுகளைக் கூப்பிட்டு, "ரெண்டுபேரும் மேஜர். மனசு ஒத்தவகளைத் தொந்தரவு பண்ணக்கூடாது'ன்னு எச்சரிச்சு அனுப்பினாங்க. இருந்தும் இப்புடி துடிதுடிக்க சீரழிச்சுட்டாவளே'' என்று துணையாக இருந்த மகனையும், மருமகளையும் பறிகொடுத்த முத்துமாரி கதறினார்.

விசாரணை அதிகாரிகளுடன் பேசியதில், “""வேறு சாதிக்காரரோடு மகள் போனதை, அவரது தந்தையால் ஜீரணிக்க முடியவில்லை. தவிர, இந்தப் படுகொலையில் இருவரின் உடல்களில் விழுந்த வெட்டுகளின் ஆழத்தைப் பார்க்கும்போது, புதிதாக கொலைசெய்ய அரிவாள் பிடித்தவர்களைப் போலத் தெரியவில்லை. முதலில் ஒரேநேரத்தில் இருவரின் குரல்வளையைக் குறிவைத்து ஆழமாக வெட்டிப் பிளந்து, அவர்களை ஓலமிட விடாமல் செய்துவிட்டு, பின் மணிக்கட்டுகளைத் துண்டாக்கி இருக்கிறார்கள். கூலிப்படையினர் மற்றும் தேர்ந்த குற்றவாளிகளின் ஸ்டைல் இது''’என்கிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் கூறியது, ""பெண்ணின் தந்தை அழகர் மற்றும் சிலரையும் பிடித்து விசாரித்து வருகிறோம். அழகர் தான்தான் கொலை செய்ததாகச் சொல்கிறார். மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது''’என்றவரிடம், "இதுபோன்ற வெட்டும் திறன் சாதாரணமானவர்களுக்கு சாத்தியமா?' என்று கேட்டபோது, “""அந்தக் கோணத்திலும் பார்க்கிறோம்''’என்றார்.

சாதிமறுப்புத் திருமணங்களை காலமே அங்கீகரித்து விட்டது. சாதி ஆணவ வெறியோ முறுக்கிக்கொண்டு அரிவாளை உயர்த்துகிறது.